அரசு தொடக்கப்பள்ளிகளில் திறன்பலகையில் எளிய முறையில் படிக்கும் மாணவ-மாணவிகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு எனப்படும் திறன்பலகை மூலம் எளிய முறையில் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
ராமநாதபுரம்,
மாணவ-மாணவிகளுக்கு ஆரம்ப கல்வி என்பது ஆயுள்வரை கல்வித்திறனை வெளிப்படுத்துவதாகும். ஆரம்ப காலத்தில் நெல்மணிகளில் எழுத தொடங்கி பின்னர் காலவளர்ச்சியின் காரணமாக கரும்பலகை உள்ளிட்டவைகளின் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது டேப்லெட் மூலம் கல்வி கற்பிக்கும் முறையும், ஸ்மார்ட் போர்டு எனப்படும் திறன்பலகை மூலமும் கல்வி கற்பிக்க தொடங்கி உள்ளனர். அந்த அளவிற்கு நவீன தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ளதோடு, மாணவ-மாணவிகளுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் திறன் ஏற்படுத்தப்பட்டு மனதில் நீங்காமல் பதிய வைக்க இந்த முறை பயன்பட்டு வருகிறது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்சியாளர் உலகராஜ் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை பயன்படுத்தி எழுத்துக்கள், வார்த்தைகள் கற்பதற்கும், நீடித்த நினைவாற்றலுக்கும் பயன்படும் வகையில் வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், பாடல்கள், நாடகங்கள் மூலம் ஆரம்ப கல்வி கற்பித்து அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்து வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக மாவட்ட கலெக்டர் நடராஜன், முதன்மை கல்வி அலுவலர் முருகன் ஆகியோரின் ஆலோசனையின் அடிப்படையில் ஸ்மார்ட் போர்டு எனப்படும் திறன்பலகை கற்பிக்கும் பயிற்சியை மேற்கொண்டு வந்த ஆசிரியர் உலகராஜ் அதனை பயன்படுத்தி ஆரம்ப கல்வி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
அரசு பள்ளிகளில் திறன்பலகை எனப்படும் ஸ்மார்ட் போர்டு வாங்கி பயன்படுத்துவது அதிகம் செலவாகும் என்பதால் ஆசிரியர் உலகராஜ் தனது சொந்த செலவில் மடிக்கணினி, ஒளிப்பட கருவி உள்ளிட்டவைகளை வாங்கி வெண்திரையில் மாணவ-மாணவிகளுக்கு படக்காட்சிகள் மூலம் கல்வி கற்பித்து கரும்பலகை வகுப்பறைகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றி வருகிறார். ஆரம்ப கல்விக்கான எழுதி பழகுதல், வாசித்தல், பயிற்சி மேற்கொள்ளுதல் போன்றவற்றை கற்பிப்பதோடு, புதிதாக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளன. கியூஆர் கோடு பாடங்களையும், கற்றலை வலுப்படுத்தி மனதில் பதிய செய்ய 4டி தொழில்நுட்ப அனிமேசன்களை காட்டியும் கற்பித்து புதிய புரட்சி ஏற்படுத்தி வருகிறார்.
பாடங்கள் தொடர்பான செயலிகளை பணம்கொடுத்து வாங்கி தரவிறக்கம் செய்து அதனை வெண்திரையில் காட்டி செயல்முறை கற்பித்தல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த புதிய முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுவதால் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் ஆடிப்பாடி மகிழ்ந்து பாடங்களை கற்று வருகின்றனர். கடந்த காலங்களில் முதல்நாள் நடத்தும் பாடங்கள் மறுநாள் மறந்து போன மாணவர்கள் தற்போது இந்த புதிய முறையால் மனதில் பதிந்து அதிக நினைவாற்றல் மிக்கவர்களாக மாறிவருகின்றனர்.
ராமநாதபுரம் ஒன்றியத்தில் உள்ள 18 அரசு தொடக்க பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் ஒரு பள்ளி வீதம் சென்று இந்த திறன்பலகை கற்பித்தல் முயற்சியை மேற்கொண்டுவரும் ஆசிரியர் பயிற்சியாளர் உலகராஜ் அந்தந்த பள்ளி ஆசிரியர்களுக்கு இதுகுறித்து பயிற்சி அளித்து வருகிறார். இதன்மூலம் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ராமநாதபுரத்தில் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு முறை கல்வி கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story