பள்ளிக்கூட வகுப்பு நேரத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் தனியார் பள்ளிகளின் உரிமம் ரத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை
பள்ளிக்கூட வகுப்பு நேரத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் தனியார் பள்ளிக்கூடங்களின் தடையில்லா சான்று ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்தார்.
ஈரோடு,
ஈரோடு பஸ்நிலையத்தில் நேற்று நடந்த புதிய பஸ்கள் இயக்க தொடக்க விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
தனியார் பஸ்களுக்கு இணையாக புதிய பஸ்களை தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்கள் இயக்கி வருகின்றன. தற்போது புதிதாக சொகுசு பஸ்கள், குளிர்சாதன வசதி மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் 517 பஸ்களை இயக்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்துக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பஸ்களில் 11 பஸ்கள் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. புதிய வகுப்பறைகள் கட்டப்படும்போது அந்தந்த மாடியிலேயே கழிப்பறைகளும் இருக்கும் வகையில் கட்டப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் பள்ளிக்கூடத்தில் இருக்கின்றன. பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஓரிரு மாற்றுத்திறனாளிகளுக்கு என்று கழிப்பிடம் அமைக்கும் திட்டம் உடனடியாக சாத்தியம் இல்லை. ஆனால் இதற்கான பணிகள் படிப்படியாக செய்யப்படும். மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் அவர்கள் படிக்கும் வகுப்புகள் மாடி ஏறி செல்லும் வகையில் இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோட்டில் வகுப்பறையை தரைதளத்துக்கு மாற்ற வேண்டும் என்று மாற்றுத்திறனாளி மாணவி கொடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டு, வகுப்பு உடனடியாக தரைதளத்துக்கு மாற்றப்படும்.
பள்ளிக்கல்வித்துறையை பொறுத்தவரை எந்த புகாராக இருந்தாலும் அது உண்மையாக இருந்தால், அதை முழுமையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போதிய ஆதாரம் மற்றும் உண்மை இல்லாமல் எந்த புகார்களையும் தெரிவிக்க வேண்டாம்.
தனியார் பள்ளிக்கூடங்கள் நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் வகையில் பள்ளிக்கூட பாடவேளையில் பயிற்சி வகுப்புகள் எடுக்கக்கூடாது. பள்ளிக்கூட நேரத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கும் தனியார் பள்ளிக்கூடங்களின் ‘தடையில்லாத சான்று’ உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை செய்யப்படுகிறது. தனியார் பள்ளிக்கூடங்கள் மாணவ-மாணவிகளிடம் இருந்து வசூலிக்கும் கட்டணம் மற்றும் நடைமுறைகள் குறித்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. அந்த சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். அப்போது அமைச்சர் கே.சி.கருப்பணன் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story