குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்


குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 July 2018 4:24 AM IST (Updated: 7 July 2018 4:24 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கக்கோரி ஊட்டியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஊட்டி,

தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் எட்வின் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் ஹால்துரை, மாவட்ட பொருளாளர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட துணைத்தலைவர் எட்வின் கூறியதாவது:-

தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் நடத்தி வரும் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற விகிதத்தில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகம், மொத்த விற்பனை பண்டக சாலைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், தாலுகா கூட்டுறவு விற்பனை சங்கம், மகளிர் சுய உதவிக்குழு மற்றும் பிற கூட்டுறவு சங்கங்களால் நியாய விலைக்கடைகள் நடத்தப்படுகின்றன. பொது வினியோக திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டு வந்து அரசின் கீழ் செயல்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்கில் இருந்து கூட்டுறவு நியாய விலைக்கடைகளுக்கு எடை குறைவின்றி பொருட்களை வழங்க வேண்டும். வினியோகத்தின் போது ஏற்படும் சிந்துதல், சிதறுதல்களுக்கு சேதார கழிவு 3 சதவீதம் வழங்க வேண்டும். நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்எண்ணெய், சிறப்பு பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் எடை குறையாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2012-2013-ம் ஆண்டு முதல் 2017-2018-ம் ஆண்டு வரை கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானிய தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்துவதுடன், பணியாளர்களின் மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடைகளில் எடையாளர் நியமிக்க வேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story