தடையை மீறி ஆர்ப்பாட்டம்: தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 550 பேர் கைது


தடையை மீறி ஆர்ப்பாட்டம்: தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 550 பேர் கைது
x
தினத்தந்தி 7 July 2018 4:36 AM IST (Updated: 7 July 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வை சேர்ந்த கார்த்திக் எம்.எல்.ஏ. உள்பட 550 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளுக்கு 24 மணி நேர குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் நிறுவனத்துக்கு பணிகள் வழங்கப்பட்டு உள்ளன. குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வெளிநாட்டு நிறுவனத்துக்கு பணிகள் வழங்கப்பட்டதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க. மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான நா.கார்த்திக் தலைமை தாங்கினார்.


தி.மு.க. சொத்து பாதுகாப்புக்குழு துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிசாமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பி.நாச்சிமுத்து, மெட்டல் மணி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பைந்தமிழ் பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி கொடுக்கப்படவில்லை என்பதால், தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் அங்கு அனுமதி இல்லாமல் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நா.கார்த்திக் எம்.எல்.ஏ. உள்பட 550 பேரை கைது செய்து, கோவையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

முன்னதாக நா.கார்த்திக் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவையில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தை செயல்படுத்த சூயஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு வருடம் ஆய்வு பணியும், 4 வருடங்கள் திட்ட பணிகளை செய்யவும், 21 வருடம் குடிநீர் பராமரிப்பு பணிகள் செய்ய என்று 26 ஆண்டுகள் அந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இது முறைகேடு நடக்க வழிவகுக்கும்.

24 மணி நேர குடிநீர் திட்டம் கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது கொண்டு வர முடிவு செய்து, மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, நிதி வழங்க மத்திய-மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் ஆட்சி மாறியதால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்ற இருந்தாலும், அதன் உரிமை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது கண்டிக்கத்தக்கது.

வெளிநாட்டு நிறுவனத்துக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக கோவை மாநகர மக்களிடமோ, எம்.எல்.ஏ.க் களிடமோ கருத்து கேட்க வில்லை. அதிகாரிகள் தானாகவே முடிவு எடுத்து உள்ளனர். கோவை மாநகராட்சி வரலாற்றிலேயே 26 ஆண்டுகளுக்கு குடிநீர் வழங்கும் உரிமையை ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது இதுதான் முதன்முறை ஆகும். இதனால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த ஒப்பந்தத்தை மாநகராட்சி உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர் எஸ்.எம்.சாமி, கோவை லோகு, முன்னாள் கவுன்சிலர்கள் கார்த்திக் செல்வராஜ், மாரீஸ்வரன் மற்றும் வீரகோபால், மகுடபதி, முருகவேல், கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story