பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? கலெக்டர் விளக்கம்


பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? கலெக்டர் விளக்கம்
x
தினத்தந்தி 6 July 2018 11:11 PM GMT (Updated: 6 July 2018 11:11 PM GMT)

பிளாஸ்டிக் பொருட் களை ஒழிக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து கலெக்டர் ஹரிகரன் விளக்கம் அளித்து பேசினார்.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் தவிர பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ் டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட்கள், பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவை வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடை செய்யப்படுகிறது.

எனவே, வியாபாரிகளும், பொதுமக்களும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பைகள், காகித உறைகள், வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள், தாமரை இலைகள், மூங்கிலால் செய்யப்படும் பிரஸ்கள், ஸ்பூன்கள், பைகள் போன்றவற்றினை பயன்படுத்திட வேண்டும்.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பொருட் கள் குறித்து உள்ளாட்சி அமைப்பினரும், மாநகராட்சியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பொதுமக்கள் பார்க்கும் வகையில் கண்காட்சிகளை நடத்திட வேண்டும். திருமண மண்டபங்களில் விசேஷ நிகழ்ச்சிகள் நடத்துவோரிடம் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து தெரிவித்து மாற்றுப்பொருட்களை உபயோகிக்க திருமண மண்டப உரிமையாளர்கள் அறிவுறுத்திட வேண்டும். குறைந்த விலையிலான துணிப்பைகளை வழங்கிட தன்னார்வலர்களுடன் இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எளிதில் மக்கும் பொருட் களை உற்பத்தி செய்யும் தொழில் முனைவோர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றார்கள். புதிய துணி கைப்பைகள் தேவை அதிகரிக்கும் என்பதால் வீட்டிலுள்ள துணி தைக்கும் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். எனவே, பொதுமக்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு தங்களது ஓத்துழைப்பினை வழங்கி பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக கோவையை உருவாக்கிட உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் கலெக்டர் தலைமையில் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் பிளாஸ்டிக் தடுப்பு உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜன், சப்-கலெக்டர் கார்மேகம், ஆர்.டி.ஓ. தனலிங்கம், அனைத்து துறை அரசு அலுவலர்கள், தனியார் உணவு விடுதி கூட்டமைப்பினர், கேட்டரிங் கூட்டமைப்பினர், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story