ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் செயல்படும் அரசு கள்ளர் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்
ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் செயல்படும் அரசு கள்ளர் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்களை அரசு நியமனம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சத்திரப்பட்டி,
ஒட்டன்சத்திரம் ஒன்றியம் குட்டில்நாயக்கன்பட்டியில் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதேபோல் தொப்பம்பட்டி ஒன்றியம் ஒத்தையூரிலும் ஒரு அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என புகார் எழுந்தது.
மேலும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று ஒட்டன்சத்திரம் பகுதிக்கு வந்தார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அரசு கள்ளர் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவ-மாணவிகள் அவதியடைவதாக கட்சி நிர்வாகிகள், ஜி.ராமகிருஷ்ணனிடம் தெரிவித்தனர். இதையடுத்து குட்டில்நாயக்கன்பட்டி, ஒத்தையூரில் செயல்படும் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளிகளை ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் கட்சியினர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது அவரிடம் மாணவ-மாணவிகள் பல்வேறு புகார்களை தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து நிருபர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
அரசு கள்ளர் பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதே போல் போதுமான அளவு ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை. எனவே அரசு கள்ளர் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளிகளில் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களையும் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். அரசு கள்ளர் பள்ளிகளை பார்வையிட்ட ஜி.ராமகிருஷ்ணனுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு செயலாளர் சச்சிதானந்தம், தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் பெருமாள் மற்றும் பலர் சென்று இருந்தனர்.
Related Tags :
Next Story