ரசாயன பொருட்கள் மூலம் பதப்படுத்தப்படுவதாக புகார்: மீன் விற்பனை கடைகளில் அதிகாரிகள் சோதனை


ரசாயன பொருட்கள் மூலம் பதப்படுத்தப்படுவதாக புகார்: மீன் விற்பனை கடைகளில் அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 6 July 2018 11:33 PM GMT (Updated: 6 July 2018 11:33 PM GMT)

தேனி மாவட்டத்தில் ரசாயன பொருட்கள் மூலம் மீன்கள் பதப்படுத்தி விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து அதிகாரிகள் மீன் விற்பனை கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

ஆண்டிப்பட்டி,

கேரளா மாநிலத்தில் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அவ்வாறு அனுப்பப்படும் மீன்கள் எளிதில் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக ஒரு விதமான ரசாயன பொருட்கள் மூலம் பதப்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

அவ்வாறு பதப்படுத்தப்படும் மீன்களை சாப்பிடும் போது, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், தொடர்ந்து ரசாயன பொருட் கள் மூலம் பதப்படுத்தப்பட்ட மீன்களை சாப்பிட்டால் உயிர்பலி ஏற்படும் நிலையும் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. அதுபோன்ற ரசாயனம் பொருட்கள் மூலம் பதப்படுத்தப்பட்ட மீன்கள், தேனி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்த அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து மீன்வளத்துறையினரும், உணவு பாதுகாப்புத்துறையினரும் கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டம் முழுவதும் மீன் விற்பனை செய்யப்படும் கடைகள், அங்காடிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சுகுணா, மீன்வளத்துறை ஆய்வாளர் இந்துசாரா, துணை ஆய்வாளர் கலையரசி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழுவினர் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தேனி, போடி, கம்பம், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் பகுதிகளில் செயல்படும் மீன் விற்பனை கடைகள், அங்காடிகளில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரசாயன பொருட்கள் மூலம் பதப்படுத்தப்பட்ட மீன்கள் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி தேனி பகுதியில் 5 கிலோவும், ஆண்டிப்பட்டி பகுதியில் 10 கிலோவும் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்றும், கெட்டுப்போன மீன்களை இனிமேல் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரித்தனர்.

Next Story