புனே அருகே மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்
மும்பையில் இருந்து மதுரை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் புனே அருகே தடம்புரண்டது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
மும்பை,
மும்பையில் இருந்து மதுரை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் புனே அருகே தடம்புரண்டது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
தடம்புரண்ட ரெயில்
மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் (எல்.டி.டி.) மற்றும் மதுரை இடையே வாரந்தோறும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 12.15 மணிக்கு எல்.டி.டி. ரெயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டது. அதிகாலை 2.44 மணிக்கு புனே அருகே உள்ள கண்டாலா ரெயில் நிலைய 1-வது பிளாட்பாரத்திற்குள் இந்த ரெயில் நுழைந்தது. அப்போது ரெயிலின் கடைசி சரக்கு பெட்டியுடன் கூடிய பயணிகள் பொதுப்பெட்டி தடம்புரண்டது. அப்போது அந்த பெட்டி மீது ரெயிலை தள்ளிக்கொண்டு வருவதற்காக கடைசியில் பொருத்தப்பட்டு இருந்த என்ஜின் மோதியது. இதில் தடம்புரண்ட பெட்டி நொறுங்கியது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவல் அறிந்து ரெயில்வே ஊழியர்கள் விபத்து மீட்பு ரெயிலுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் தடம்புரண்ட பெட்டியை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தாமதமாக புறப்பட்டது
காலை 6 மணியளவில் மீட்பு பணிகள் முடிந்து ரெயில் அங்கு இருந்து புறப்பட்டது. தடம்புரண்ட பெட்டியில் இருந்த பயணிகள் மற்ற பெட்டிகளில் அமர வைக்கப்பட்டு இருந்தனர். ரெயில் புனே சென்ற பிறகு கூடுதல் பெட்டி அதனுடன் இணைக்கப்பட்டது. அந்த பெட்டியில், தடம்புரண்ட பெட்டியில் இருந்த பயணிகள் உட்கார வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் தடம்புரண்ட ரெயில் சுமார் 4 மணி நேரம் தாமதமாக புனேயில் இருந்து காலை 8 மணியளவில் புறப்பட்டு சென்றது.
ரெயில் தடம்புரண்ட விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரெயில்கள் ரத்து
இந்த விபத்து காரணமாக நேற்று கர்ஜத்- புனே, புனே- கர்ஜத், சி.எஸ்.எம்.டி.- புனே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், புனே- சி.எஸ்.எம்.டி. இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், புனே- சி.எஸ்.எம்.டி.(11010, 12126), புனே- சின்காட்(11009), சி.எஸ்.எம்.டி.- புனே(12125) ஆகிய ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
மேலும் புஷாவல்- புனே ரெயில் மன்மாட் வழியாக இயக்கப்பட்டது.
Related Tags :
Next Story