ஜெயலலிதா பற்றி பேச்சு: திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்கு தொடர்ந்தவர் வேடசந்தூர் போலீசில் ஆஜர்


ஜெயலலிதா பற்றி பேச்சு: திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்கு தொடர்ந்தவர் வேடசந்தூர் போலீசில் ஆஜர்
x
தினத்தந்தி 7 July 2018 12:15 AM GMT (Updated: 7 July 2018 12:01 AM GMT)

ஜெயலலிதா பற்றி பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் ஐகோர்ட்டு உத்தரவின்படி வேடசந்தூர் போலீசில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார்.

வேடசந்தூர், 

மதுரை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளரும், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலருமான ராஜா எஸ்.சீனிவாசன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் கடந்த மாதம் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கடந்த 19.6.2018-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது கொள்ளையடித்த பணத்தைத்தான், டி.டி.வி.தினகரன் மூலம் பெற்றுக் கொண்டு, அந்த பணத்தால் வெற்றி பெற்ற 18 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.விற்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள்“ என உள்நோக்கத்துடன் பேசியுள்ளார். அவர் பேசியதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அமைச்சரின் அவதூறு பேச்சு சட்டப்படி குற்றம். எனவே, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேடசந்தூர் போலீசில் புகார் அளித்தேன். இந்த மனு மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்றம் தலையிட்டு திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணகுமார் விசாரித்தார்.் அப்போது அவர், வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் 6-ந்தேதி(நேற்று) ராஜா எஸ்.சீனிவாசன் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி நேற்று ராஜா எஸ்.சீனிவாசன் தனது வக்கீலுடன் வேடசந்தூர் போலீஸ் நிலையத்திற்கு மாலை 3 மணிக்கு வந்தார்.

அங்கு தனிஅறையில் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் வீரகாந்தி ஆகியோர் முன்னிலையில் ராஜா எஸ்.சீனிவாசனிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. வாக்குமூலம் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த வாக்குமூலம் வெள்ளை பேப்பரில் டைப்செய்து ராஜா எஸ்.சீனிவாசனிடம் கையெழுத்து பெறப்பட்டது. அதன் பிறகு அவர் மாலை 5.30 மணிக்கு போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து காரில் ஏறி மதுரை புறப்பட்டு சென்றார்.

முன்னதாக ராஜா எஸ்.சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேடசந்தூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று உங்களது வாக்குமூலத்தை பதிவு செய்யுங்கள். அதில் நடவடிக்கை இல்லை என்றால் அதன்பிறகு ஐகோர்ட்டை அணுகுங்கள் என்று நீதிபதி கூறியதால் வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளேன். என்னிடம் நாளிதழில் வந்த செய்தி மட்டுமே ஆதாரமாக உள்ளது. வீடியோ காட்சி போன்ற எந்த ஆதாரமும் இல்லை. நான் கொடுத்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ராஜா எஸ்.சீனிவாசன் வேடசந்தூர் போலீஸ்நிலையத்தில் வாக்குமூலம் கொடுக்க வந்ததால், பொதுமக்கள் யாரையும் 3 மணி நேரமாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கவும், விசாரணைக்காகவும் அனுமதிக்கவில்லை.

Next Story