திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பன்றிகளை பிடித்த தொழிலாளர்கள் மீது கற்களை வீசி தாக்குதல்: 3 பேர் காயம்


திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பன்றிகளை பிடித்த தொழிலாளர்கள் மீது கற்களை வீசி தாக்குதல்: 3 பேர் காயம்
x
தினத்தந்தி 7 July 2018 6:00 AM IST (Updated: 7 July 2018 5:31 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பன்றிகளை பிடித்த தொழிலாளர்கள் மீது கற்களை வீசி தாக்கியதில் 3 பேர் காயம் அடைந்தனர். மினிலாரி கண்ணாடி உடைந்தது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பன்றிகளை பிடித்த தொழிலாளர்கள் மீது கற்களை வீசி தாக்கியதில் 3 பேர் காயம் அடைந்தனர். மினிலாரி கண்ணாடி உடைந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பன்றிகளை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அய்யன்குளம், வேடபட்டி, கக்கன்நகர், நத்தம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றை மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது பிடித்து காட்டுப்பகுதியில் கொண்டு சென்று விடுகின்றனர். எனினும், பன்றிகள் குறைந்தபாடில்லை.

இதனால் மாநகராட்சி முழுவதும் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக மதுரை ரிங்ரோடு கல்மேடு பகுதியில் இருந்து 18 தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். மேலும் பன்றி பிடிப்பதற்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் கருதினர். எனவே, போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் முதல் பன்றிகளை பிடிக்கும் பணி தொடங்கியது.

இதில் முதல் நாளில் வேடபட்டி, அய்யன்குளம் பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் 50 பன்றிகள் பிடிக்கப்பட்டன. இதையடுத்து நேற்று 2-வது நாளாக பன்றிகளை பிடிக்கும் பணி தொடங்கியது. இதில் திண்டுக்கல்-நத்தம் சாலை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் பகுதியில் சுற்றித்திரிந்த 10 பன்றிகளை பிடித்தனர். அதன்பின்னர் வேடபட்டியில் ஏ.வெள்ளோடு செல்லும் சாலை பகுதியில் பன்றிகளை பிடிக்க சென்றனர்.

அப்போது பன்றிகளை பிடிக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே பன்றிகள் உரிமையாளர்கள் சிலர் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் திடீரென அவர்கள் பன்றிகளை பிடித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கற்களை எடுத்து வீசினர். சிலர் தூரத்தில் இருந்து கவண் மூலம் கற்களை எறிந்தனர்.

இதில் பன்றிகளை ஏற்றி செல்வதற்காக கொண்டு வரப்பட்ட மினிலாரியின் கண்ணாடி உடைந்தது. பன்றிகளை பிடித்து கொண்டிருந்த மதுரை கல்மேடு கந்தசாமி மகன் கருப்புசாமி (வயது 25), முருகமணி மகன் புகழ் (18), பூமி மகன் அரவிந்த்ராஜ் (22) ஆகியோர் காயம் அடைந்தனர். மேலும் மினிலாரியின் டிரைவர் மற்றும் பிற தொழிலாளர்களையும் தாக்க ஓடி வந்தனர்.

இதையடுத்து பாதுகாப்புக்காக சென்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்கு இடையே அங்கு சுற்றித்திரிந்த பன்றிகளை தொழிலாளர்கள் பிடித்து விட்டனர். பின்னர் காயம் அடைந்தவர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களையும் போலீசார் தங்களது வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து ரெயில் நிலையம் அருகேயுள்ள கக்கன்நகர் பகுதியில் தொழிலாளர்கள் பன்றிகளை பிடிக்க சென்றனர். அங்கும் பன்றிகளின் உரிமையாளர்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பன்றிகள் ஏற்றப்பட்ட மினிலாரியின் முன்பு அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி விட்டு மினிலாரியை மீட்டு சென்றனர்.

இதற்கிடையே பன்றிகளை பிடித்த தொழிலாளர்கள் மீது கற்களை வீசி தாக்கியது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் மாநகராட்சி அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்றைய தினம் 23 பன்றிகள் பிடிக்கப்பட்டன.

Next Story