அப்துல்லாபுரத்தில் டாஸ்மாக் கடையில் நடந்த ஐ.டி.ஐ. மாணவர் கொலையில் 2 பேர் கைது


அப்துல்லாபுரத்தில் டாஸ்மாக் கடையில் நடந்த ஐ.டி.ஐ. மாணவர் கொலையில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 July 2018 12:04 AM GMT (Updated: 7 July 2018 12:04 AM GMT)

அப்துல்லாபுரத்தில் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் ஐ.டி.ஐ. மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர், 

வேலூர் தொரப்பாடி கே.கே.நகரை சேர்ந்த குமார் என்பவருடைய மகன் சக்திவேல் (வயது 22). இவர் இந்த ஆண்டு ஐ.டி.ஐ.யில் சேர்ந்துள்ளார். ஐ.டி.ஐ.யில் சேர்ந்ததற்காக சக்திவேல் தனது நண்பர்களுக்கு விருந்து வைக்க முடிவு செய்துள்ளார். அதன்படி சக்திவேல் தனது நண்பர்களான ஜீவாநகரை சேர்ந்த வெற்றிவேல் (18), கே.கே.நகரை சேர்ந்த நவீன்குமார் (19) மற்றும் 3 பேர் என மொத்தம் 6 பேர் வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று முன்தினம் இரவு சென்றனர்.

அங்கு அவர்கள் மது குடித்தபோது அவர்களுக்கும், அங்கு மதுகுடித்த சதுப்பேரி காலனியை சேர்ந்த சதீஷ்குமார் (30) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அங்கு மீண்டும் சக்திவேல் தரப்பினருக்கும் பாரில் சிக்கன் போன்ற தின்பண்ட உணவுகள் விற்கும் வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் (38) என்பவருக்கும் இடையேயும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன் பின்னர் சக்திவேலுடன் வந்தவர்கள் 3 பேர் ஒரு மோட்டார்சைக்கிளில் முதலில் சென்று விட்டனர். சக்திவேல், வெற்றிவேல், நவீன்குமார் ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார்சைக்கிளில் புறப்பட்டனர்.

அப்போது மீண்டும் அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் சக்திவேல், வெற்றிவேல், நவீன்குமார் ஆகிய 3 பேரையும் மதுபாட்டில் மற்றும் கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் 3 பேருக்கும் வயிற்றில் குத்து விழுந்து படுகாயமடைந்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சக்திவேல் பரிதாபமாக இறந்துவிட்டார்.

வெற்றிவேல், நவீன்குமார் ஆகியோர் ஆபத்தான நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஆறுமுகம், சதீஷ்குமார் ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story