விலகிச் செல்லும் சந்திரன்


விலகிச் செல்லும் சந்திரன்
x
தினத்தந்தி 7 July 2018 11:47 AM IST (Updated: 7 July 2018 11:47 AM IST)
t-max-icont-min-icon

“நிலா, நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா” என குழந்தைகளுக்கான பாட்டு ஒன்று உண்டு.

நிலா வருவதாக இல்லை. சொல்லப் போனால் சந்திரன் பூமியை விட்டு மெல்ல விலகிச் செல்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் இப்போது ஆண்டொன்றுக்கு 3.82 செ.மீ. வீதம் அதிகரித்து வருகிறது.

சந்திரன் பூமியிலிருந்து விலகிச் செல்கின்றது என்பது ஏதோ இப்போது கண்டுபிடிக்கப்பட்ட விஷயம் அல்ல. பரிணாமக் கொள்கையை உருவாக்கிய சார்லஸ் டார்வினின் புதல்வரான ஜார்ஜ் ஹோவர்ட் டார்வின் கடந்த 19-ம் நூற்றாண்டிலேயே இதை கண்டுபிடித்து கூறினார். எந்த அளவுக்கு விலகிச் செல்கின்றது என்பது பின்னர் துல்லியமாகக் கண்டறியப்பட்டது.

சந்திரனுக்கு அமெரிக்க விண்வெளி வீரர்கள் சென்று வந்தது நமக்குத் தெரியும். அப்படிச் சென்ற அமெரிக்க வீரர்கள் சந்திரனில் முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரியிலான பிரதிபலிப்புக் கருவிகளை வைத்து விட்டு வந்தனர். பின்னர் அமெரிக்க விஞ்ஞானிகள் அக்கருவிகளை நோக்கி பூமியிலிருந்து லேசர் ஒளிக்கற்றையை செலுத்தினர். அக்கருவிகளில் பிரதிபலிக்கப்பட்ட அந்த லேசர் ஒளிக்கற்றை திரும்ப பூமியை நோக்கி வந்தன.

லேசர் ஒளிக்கற்றைகள் பூமிக்குத் திரும்பி வர எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை விஞ்ஞானிகள் மிகத் துல்லியமாகக் கணக்கிட்டனர். அந்த நேரத்தை வைத்து சந்திரனுக்கு உள்ள தூரத்தைக் கணக்கிட்டனர். இப்படியாகத் தான் சந்திரன் ஆண்டுதோறும் எந்த அளவுக்கு விலகிச் செல்கிறது என்பது துல்லியமாகக் கணக்கிடப்பட்டது.

சந்திரனுக்கு உள்ள தூரத்துக்கும் பூமியின் சுழற்சி வேகத்துக்கும் ஒரு விதத் தொடர்பு உள்ளது. அதாவது பூமியில் ஒரு நாள் என்பது எவ்வளவு நேரம் என்பதை சந்திரன் தீர்மானிக்கிறது. பூமி தனது அச்சில் ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு ஆகும் நேரத்தைத் தான் நாம் ஒரு நாள் என்கிறோம்.

நடைமுறையில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் என்று நாம் வைத்துக் கொண்டுள்ளோம். உண்மையில் பூமி தனது அச்சில் ஒரு முறை சுற்றி முடிக்க 23 மணி 56 நிமிடம் 4 வினாடி ஆகின்றது.

பூமியிலிருந்து சந்திரன் விலகிச் செல்வதன் விளைவாக பூமியில் ஒரு நாள் என்பது அதிகரித்துக் கொண்டே போகும். அதாவது ஒரு நாள் என்பது நீண்டு விடும். பல லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு தான் இதில் ஏற்படுகின்ற வித்தியாசம் நன்கு புலப்படும்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரனை ஒப்புநோக்குகையில் பூமிக்கு அருகே இருந்தது. அப்போது ஒரு நாள் என்பது 18 மணி நேரமாக இருந்தது. சந்திரன் விலக முற்பட்டதால் பூமியின் சுழற்சி வேகம் குறைந்தது. இப்போதுள்ளபடி சுமார் 24 மணி நேரம் என்ற நிலைக்கு வந்துள்ளது.

சந்திரன் இவ்விதம் விலகிச் செல்வதால் இன்னும் சில கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூரண சூரிய கிரகணமே இல்லாமல் போய்விடும்.

சந்திரன் வானில் குறிப்பிட்ட அளவில் தெரிகிறது. பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பவுர்ணமியன்று இரவில் சந்திரனின் அளவு சிறியதாகி விடும். இப்படி சைஸ் குறைவதால் சூரிய கிரகணத்தின் மீது விளைவை உண்டாக்கும்.

உள்ளபடி சூரியனின் குறுக்களவு சந்திரனின் குறுக்களவை விட 400 மடங்கு அதிகம். சந்திரனிலிருந்து சூரியன் உள்ள தூரம் இதே போல 400 மடங்கு அதிகம். இது தற்செயல் பொருத்தமே. இதன் விளைவாக பூரண கிரகணத்தின் போது சந்திரனின் வட்டம் மிகச் சரியாக சூரிய ஒளி வட்டத்தை விளிம்போடு விளிம்பாகப் பொருந்தி சூரியனை மறைக்கிறது. இதையே நாம் பூரண சந்திர கிரகணம் என்கிறோம்.

அபூர்வமாக கங்கண சூரிய கிரகணம் நிகழும். சூரியன் அந்த சமயத்தில் சற்று தொலைவில் அமைந்திருக்க, சந்திரனை ஒப்புநோக்குகையில் சற்றே அருகில் அமைந்திருக்கும். இதனால் சூரியனின் ஒளி வட்டத்தின் நடுவே சந்திரன் அமைந்ததாகி சூரியனின் நடுப் பகுதி மட்டும் மறைக்கப்படும். இதையே கங்கண சூரிய கிரகணம் என்பர்.

விலகிச் செல்லும் சந்திரன் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் விலகி வடிவில் சிறுத்து விட்டால் பூரண சூரிய கிரகணமே ஏற்படாது. மாறாக கங்கண சூரிய கிரகணம் மட்டுமே நிகழும்.

சந்திரன் ஏன் பூமியிலிருந்து விலகிச் செல்கிறது?

பூமிக்கு ஈர்ப்பு சக்தி உண்டு என்பதை அறிவோம். இதை புவி ஈர்ப்பு சக்தி என்கிறோம். சந்திரனுக்கும் இதே போல ஈர்ப்பு சக்தி உண்டு. பூமியின் ஈர்ப்பு சக்தி அதிகம். சந்திரனின் ஈர்ப்பு சக்தி குறைவு. ஆனாலும் பூமி மீது சந்திரன் ஈர்ப்பு சக்தியை செலுத்தியபடி உள்ளது.

இதன் விளைவாக பூமியில் கடல்களில் உள்ள நீர் மேல் நோக்கி இழுக்கப்படுகிறது. குறிப்பாக சந்திரனை நோக்கி உள்ள கடல் பகுதியில் மொத்த நீரும் சற்றே உயர எழும்புகிறது. அதிலும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இது அதிகமாக உள்ளது.

இவ்விதமாக பூமியின் இயக்கத்தின் மீது சந்திரன் விளைவை உண்டாக்குகிறது. சந்திரனின் ஈர்ப்பு சக்தி, பூமியின் ஈர்ப்பு சக்தி ஆகிய இரண்டும் ஏற்படுத்தும் விளைவுகள் காரணமாகவே பூமியிலிருந்து சந்திரன் விலகி வருகிறது.

சரி, சந்திரன் இப்போது எவ்வளவு தொலைவில் உள்ளது?

பூமியை சந்திரன் சுற்றும் பாதையானது கச்சிதமான வட்ட வடிவில் இல்லை. அது அதுங்கிய வட்டமாக, அதாவது சற்றே நீள் வட்டமாக உள்ளது. எனவே சந்திரன் சில சமயங்களில் பூமியிலிருந்து 3 லட்சத்து 57 ஆயிரத்து 431 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வேறு சில சமயங்களில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 223 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சந்திரன் அருகாமையில் இருக்கிற சமயத்தில் பவுர்ணமியாக இருக்குமானால் அந்த பவுர்ணமியில் சந்திரன் சற்றே பெரிதாகத் தெரியும். மேலை நாட்டவர் அதை சூப்பர் மூன் என்பார்கள். நாம் பெரிய நிலா என்று கூறலாம்.

- என்.ராமதுரை, அறிவியல் எழுத்தாளர்

Next Story