மாவட்ட செய்திகள்

வித்தியாசமாகத் தெரியும் இந்திய காற்று மண்டலம்... விபரீதமா? + "||" + We know different Indian air zone... Serious?

வித்தியாசமாகத் தெரியும் இந்திய காற்று மண்டலம்... விபரீதமா?

வித்தியாசமாகத் தெரியும் இந்திய காற்று மண்டலம்... விபரீதமா?
நம் நாட்டின் காற்று மண்டலத்தை விண்ணிலிருந்து செயற்கைக்கோள் மூலம் பார்த்தால் ஏதோ வித்தியாசமாகத் தெரிகிறது.
பார்மால்டிஹைடு எனும் வாயு அதற்குக் காரணம்,  . தாவரங்களிலிருந்தும், மனிதனின் மாசுபடுத்தும் செயல்பாடுகளாலும் வெளியேற்றப்படும் நிறமற்ற வாயுவாகும் இது.

உலக நாடுகளின் காற்றுத் தரத்தை அளவிடுவதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விண்ணில் ஏவிய ‘சென்டினல்-5பி’ என்னும் செயற்கைக்கோள், இந்த வாயுவின் அடர்த்தி திடீரென அதிகரித்துள்ளதைக் கண்டறிந்துள்ளது.


வளி மண்டலத்தைச் சுத்தம் செய்வதற்கான கொள்கைகளை உருவாக்குவதற்குரிய அவசியத்தை வலியுறுத்துவதாக இது அமைந்திருக்கிறது.

நைட்ரஜன், ஆக்சிஜன் போன்ற முக்கிய வாயுக்களுடன் ஒப்பிடுகையில், பார்மால்டிஹைடின் சதவீதம் மிகவும் குறைவானதாகும். ஒரு பில்லியன் காற்று மூலக்கூறுகளில் ஒரு சில பார்மால்டிஹைடு மூலக்கூறுகள் மட்டுமே இருக்கும். ஆனால், பல பொதுவான சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளின் அறிகுறியாக இது இருக்கலாம் என்று பெல்ஜிய விண்வெளிக் கழகத்தின் இசபெல் டி ஸெம்ட் கூறுகிறார்.

‘‘வேறுபட்ட, எளிதில் ஆவியாகிற கரிமச் சேர்மங்களை பார்மால்டிஹைடு உருவாக்குகிறது. இதன் மூலம் இயற்கையாக தாவரங்களிலிருந்து மட்டுமல்லாமல், பெரும் தீ மற்றும் மாசுபாடு போன்றவற்றிலிருந்தும் இது உருவாகிறது’’ என்கிறார் அவர்.

‘‘இதன் அளவு பிராந்தியத்துக்குப் பிராந்தியம் வேறுபடுகிறது. ஆனால், 50 முதல் 80 சதவீதம் வரையிலான பார்மால்டிஹைடு மூலக்கூறுகள், குறிப்பிட்ட சில உயிரினங்களிலிருந்து வெளிப்படுகின்றன. ஆனால், அதற்கும் மேல் மிகப் பெரிய விஷயமாக தீயும், சுற்றுச்சூழல் மாசுபாடும் இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான தீ சம்பவங்கள் நிலக்கரிச் சுரங்கங்களிலும், காட்டுத்தீயினாலும், விவசாய நிலங்கள் எரிவதாலும் ஏற்படுகிறது’’

மேலும், நம் நாட்டில் இன்னமும்கூட சமைப்பதற்கும், வெப்ப மூட்டுவதற்கும் குறிப்பிடத்தக்க அளவு மரங்களே பயன்படுத்தப்படுகின்றன.

எளிதில் ஆவியாகிற கரிமச் சேர்மங்கள், நைட்ரஜன் மற்றும் சூரிய ஒளியுடன் சேர்ந்து வினைபுரியும்போது அது ஓசோனை உற்பத்தி செய்யும்.

இது மோசமான, எரிச்சலூட்டும் சுவாசக் கோளாறுகளை உண்டாக்குவதுடன், குறிப்பிடத்தக்க சுகாதாரப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

மிகவும் குறைந்த அளவு தாவரங்கள் மற்றும் மக்கள்தொகை உள்ள ராஜஸ்தானில் பார்மால்டிஹைடின் செறிவு ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.

மேற்கண்ட செயற்கைக்கோளானது, பார்மால்டிஹைடு மட்டுமல்லாமல் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களான நைட்ரஜன்-டை-ஆக்சைடு, ஓசோன், சல்பர்-டை-ஆக்சைடு, மீத்தேன், கார்பன் மோனாக்சைடு மற்றும் சிறிய துளிகள் மற்றும் துகள்களைக் கண்டறிந்து ஆய்வு செய்வதற்காக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

இந்த வாயுக்கள் அனைத்தும் நாம் சுவாசிக்கும் காற்றைப் பாதிப்பதால் நமது உடல் பாதிப்பு அடைவதோடு, பருவநிலை மாற்றத்திலும் முக்கியப் பங்கை வகிக்கின்றன.

இதுபோன்ற தரவுகளைப் பெறுவதற்கு ஏற்கனவே செயற்கைக்கோள்களில் பயன்படுத்தப்பட்ட ஸ்பெக்ட்ரோமீட்டர் அமைப்பான ஓமினியை விட, தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள டுரோபோமி ஆறு மடங்கு வேகமாகச் செயல்படக் கூடியது.

‘‘தகவல்களை வேகமாகப் பெறுவதும், சிறிய அளவிலான மாசு மற்றும் குறிப்பிட்ட நகரங்களின் தரவுகளைப் பெறுவதும் இதன் மூலம் சாத்தியமாகிறது. ஈரானின் டெஹ்ரானைச் சுற்றியுள்ள மாசுபாட்டை ஆய்வு செய்வதற்கு எங்களுக்கு 10 வருடத் தரவுகள் தேவைப்பட்டன. ஆனால், டுரோபோமி அமைப்பின் மூலம் வெறும் நான்கு மாத தரவுகளை கொண்டே ஒரு குறிப்பிட்ட முடிவுக்கு வந்துவிடலாம்’’ என்றும் இசபெல் சொல்கிறார்.

காற்று மாசு... அவசரமாக கவனிக்கவேண்டிய விஷயம்!