‘எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காமல் நேர்மையாக பணியாற்றுங்கள்’ பயிற்சி முடித்த சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் டி.ஐ.ஜி. அறிவுரை


‘எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காமல் நேர்மையாக பணியாற்றுங்கள்’ பயிற்சி முடித்த சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் டி.ஐ.ஜி. அறிவுரை
x
தினத்தந்தி 8 July 2018 3:15 AM IST (Updated: 7 July 2018 11:08 PM IST)
t-max-icont-min-icon

எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காமல் நேர்மையாக பணியாற்றுங்கள் என்று பயிற்சி முடித்த சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் அறிவுரை கூறினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் போலீஸ் சரகத்தில் 1985-86-ம் ஆண்டுகளில் காவலராக பணியில் சேர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்த 60 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர். இதனை தொடர்ந்து இவர்கள் 9 வார காலம் சட்டம் சார்ந்த பயிற்சிகள், கவாத்து பயிற்சி, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டனர். இந்த பயிற்சியின் நிறைவு விழா நேற்று விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் கலந்துகொண்டு பயிற்சி முடித்த சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-


சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சியில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது பெருமையாக உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறமை உள்ளது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக இருந்து தற்போது சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ள நீங்கள் உங்கள் அனுபவங்களை பயன்படுத்தி நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் அதற்கும் மேலாக சிறந்த போலீஸ் அதிகாரியாக பணியாற்ற வேண்டும். நாட்டில் 90 சதவீத மக்கள் போலீஸ் நிலையத்திற்கு வருவதில்லை. மீதமுள்ள 10 சதவீதம்பேர் வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஏழை மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று வருகின்றனர். அவ்வாறு வரும் ஏழை மக்களை அலைக்கழிக்காமல் அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.


எந்த காரணத்தை கொண்டும் லஞ்சம் வாங்காதீர்கள். எந்தவித புகார்களுக்கும் இடம் அளிக்காதவாறு நேர்மையாக பணியாற்றுங்கள். புகார் மனுக்களை உடனுக்குடன் விசாரித்து வழக்குப்பதிவு செய்யுங்கள். தாமதம் செய்தால் பாதிக்கப்பட்டோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி. அலுவலகங்களுக்கு வந்து மனு கொடுக்கிறார்கள். அந்த மனுக்கள் மீண்டும் உங்களுக்குத்தான் வரும். அதனால் எந்த புகாராக இருந்தாலும் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுங்கள். நீங்கள் அனைவரும் சிறந்த முறையில் பணியாற்றி மக்களிடம் நன்மதிப்பையும், புகழையும் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் வெள்ளைச்சாமி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை சட்ட போதகர் ரேணுகாதேவி, முதன்மை கவாத்து போதகர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story