திண்டிவனத்தில் பட்டப்பகலில் சம்பவம் கேரளா வியாபாரியை காரில் கடத்தி கத்தி முனையில் பணம் பறிப்பு இடைத்தரகர்கள் 2 பேர் கைது; பரபரப்பு தகவல்கள்


திண்டிவனத்தில் பட்டப்பகலில் சம்பவம் கேரளா வியாபாரியை காரில் கடத்தி கத்தி முனையில் பணம் பறிப்பு இடைத்தரகர்கள் 2 பேர் கைது; பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 8 July 2018 3:15 AM IST (Updated: 7 July 2018 11:21 PM IST)
t-max-icont-min-icon

கேரளா வியாபாரியை காரில் கடத்தி கத்தி முனையில் பணம் பறித்த இடைத்தரகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


திண்டிவனம்,

திண்டிவனத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-


கேரள மாநிலம் பெருங்குளம் அருகே உள்ள மணநாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்வகாப் மகன் சலீம்(வயது 38). வியாபாரியான இவர், அந்தந்த சீசனுக்கு தகுந்தாற்போல் பழங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தர்பூசணி சீசன் இருந்தது. எனவே தர்பூசணி கொள்முதல் செய்வதற்காக சலீம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு வந்தார்.

அப்போது தர்பூசணி பழங்களை கொள்முதல் செய்வதற்காக இடைத்தரகர்களான திண்டிவனம் ரோஷணை பாட்டையை சேர்ந்த எல்லப்பன் மகன் ஏழுமலை(38), அவரப்பாக்கத்தை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் செந்தில்(35) ஆகிய 2 பேரும் சலீமிற்கு அறிமுகமானார்கள்.


அதன்படி 2 பேரும், மரக்காணம் பகுதியில் தர்பூசணி கொள்முதல் செய்து சலீமிற்கு கொடுத்தனர். இவ்வாறு பலமுறை தர்பூசணியை கொள்முதல் செய்து அதனை லாரிகளில் கேரள மாநிலத்துக்கு கொண்டு சென்று சலீம் விற்பனை செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரத்தில் இடைத்தரகர்கள் 2 பேரும், சலீமை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர்கள், திண்டிவனம் பகுதியில் தர்பூசணி சீசன் முடிந்து விட்டது. தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு மாமரங்கள் அதிகளவில் காய்த்துள்ளன. இதனால் குறைந்த விலைக்கு மாம்பழங்கள் கிடைக்கும். எனவே குடும்பத்துடன் இங்கு வந்து தங்கி மாம்பழம் விற்பனை செய்யலாம். வாடகைக்கு வீடு எடுத்தும் தருகிறோம் என்று கூறி உள்ளனர்.


இதையடுத்து சலீம், தனது மனைவி ஜாஸ்மீன், மகன், 2 மகள்கள், அம்மா ராமினா, தம்பி சைதானி ஆகியோருடன் தனது காரில் கேரளாவில் இருந்து புறப்பட்டார். அவர்கள் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு திண்டிவனம் மேம்பாலத்துக்கு கீழ் வந்தனர். உடனே சலீம், இடைத்தரகர்கள் 2 பேரையும் செல்போனில் தொடர்பு கொண்டார். சிறிது நேரத்தில் அங்கு வந்த அவர்கள், வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை, தற்சமயம் அருகில் உள்ள லாட்ஜில் தங்குங்கள் என்று கூறினர். அதன்படி சலீம் குடும்பத்துடன் மேம்பாலம் அருகில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினார்.

பின்னர் இடைத்தரகர்கள் 2 பேரும், வியாபாரம் சம்பந்தமாக சலீமை வெளியே அழைத்துச்செல்வதாக அவரது குடும்பத்தினரிடம் கூறினர். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரும் சலீமை, மதியம் 1 மணி அளவில் அவரது காரிலேயே அழைத்துச்சென்றனர்.


இதற்கிடையில் சலீம் சென்று வெகுநேரமாகியும் லாட்ஜிக்கு வராததால் அவரது குடும்பத்தினர் பதற்றமடைந்தனர். உடனே சலீமின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் எடுக்கவில்லை. இதையடுத்து அவரது மனைவி ஜாஸ்மீன், இரவு 9 மணி அளவில் திண்டிவனம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, தனது கணவர் காணாமல் போனது பற்றி புகார் கொடுத்தார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையிலான போலீசார் உஷாரானார்கள். திண்டிவனம் மற்றும் ரோஷணை போலீசார் நகரம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சலீமின் செல்போன் எண்ணை வைத்து, அவர் எங்கே இருக்கிறார் என்று தேடிப்பார்த்தனர். அப்போது அவரது செல்போன் சிக்னல், பெலாக்குப்பம் சாலை வண்ணாரப்பேட்டை பகுதியை காண்பித்தது. உடனே போலீசார் அங்கு வாகனத்தில் விரைந்து சென்றனர்.

இதனிடையே பெலாக்குப்பம் சாலையில் சலீம், தனது காரில் வேகமாக திண்டிவனம் நகரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவரை மோட்டார் சைக்கிளில் 2 பேர் துரத்தி வந்தனர். போலீசாரின் வாகனத்தை கண்டதும், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

இதையடுத்து சலீமை மீட்ட போலீசார், அவரை திண்டிவனம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியது.

விசாரணையின்போது சலீம் போலீசாரிடம் கூறியதாவது:-

கத்தியை காட்டி மிரட்டினர்

இடைத்தரகர்கள் ஏழுமலையும், செந்திலும் கூறியதன் பேரில் மாம்பழம் கொள்முதல் செய்து வியாபாரம் செய்வதற்காக நான் குடும்பத்துடன் திண்டிவனத்துக்கு காரில் வந்தேன். வாடகைக்கு வீடு கிடைக்காததால் லாட்ஜில் தங்கினேன். அப்போது இடைத்தரகர்கள் 2 பேரும், மாம்பழங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக ஒருவரிடம் பேச வேண்டும் வாருங்கள் என்று கூறினார்கள். உடனே நானும், அவர்களுடன் சென்றேன்.

லாட்ஜில் நிறுத்தி இருந்த எனது காரில் 3 பேரும் ஏறினோம். நான் காரை ஓட்டினேன். திண்டிவனம் நகரத்தை கடந்ததும் ஏழுமலையும், செந்திலும் திடீரென கத்தியை எனது கழுத்தில் வைத்து மிரட்டி, நாங்கள் சொல்கிற இடத்துக்கு காரை ஓட்டிச்செல் என்றனர். உடனே நானும், அவர்கள் கூறிய இடத்துக்கு காரை ஓட்டிச்சென்றேன்.

திண்டிவனம்-பெலாக்குப்பம் சாலையில் வண்ணாரப்பேட்டை என்ற இடத்துக்கு சென்றதும், காரை நிறுத்துமாறு 2 பேரும் கூறினர். உடனே நான் காரை நிறுத்தினேன். அங்கு ஆட்கள் இல்லாத ஒரு வீட்டிற்கு அழைத்துச்சென்று, ஒரு அறையில் அடைத்து வைத்தனர். பின்னர் 2 பேரும் கத்தியை காட்டி மிரட்டி, உன்னை கடத்தி வந்திருப்பதாகவும், பணம் கொடுத்தால் விட்டுவிடுகிறோம். இல்லையெனில் கொன்று விடுவோம் என்றனர். அதற்கு நான், என்னிடம் பணம் இல்லை என்றேன்.

உடனே 2 பேரும், எனது சட்டைப்பையில் இருந்த ரூ.9 ஆயிரத்தை பறித்தனர். மேலும் எனது கார் கண்ணாடியையும் அடித்து, உடைத்தனர். அதற்குள் இரவு ஆகிவிட்டது. எனவே 2 பேரும் மது குடிப்பது பற்றி ஒருவரிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தனர். வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மது வாங்கிக்கொண்டு வந்தார். அந்த சமயத்தில் சுதாரித்துக்கொண்ட நான், வீட்டை விட்டு வெளியேறி காரை எடுத்துக்கொண்டு வேகமாக வந்தேன். உடனே அவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்தனர். அதற்குள் போலீசார் வந்து என்னை மீட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


இதனை தொடர்ந்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலை, செந்தில் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story