பள்ளி ஆசிரியை பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு: மாணவ-மாணவிகள் கதறி அழுது பாச போராட்டம்


பள்ளி ஆசிரியை பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு: மாணவ-மாணவிகள் கதறி அழுது பாச போராட்டம்
x
தினத்தந்தி 7 July 2018 11:15 PM GMT (Updated: 7 July 2018 6:38 PM GMT)

நாகை அருகே பள்ளி ஆசிரியை பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ-மாணவிகள் கதறி அழுது பாச போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1939-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியைகள்-ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் இரண்டாம் வகுப்பு ஆசிரியையாக இசபெல்லா ஜூலி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறி, இசபெல்லாஜூலியை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

பள்ளி ஆசிரியையின் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியில் குவிந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆசிரியர் குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியும், பணியிட மாற்றம் செய்த ஆசிரியையை மீண்டும் அதே பள்ளியில் பணியில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கோஷங்களை எழுப்பினர்.

அப்போது பள்ளி மாணவ, மாணவிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியை இசபெல்லாஜூலியை சூழ்ந்து கொண்டு, நீங்கள் வேறு பள்ளிக்கு போகக்கூடாது என்று கூறி அவரது கையை பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மாணவ, மாணவிகள் ஆசிரியை கட்டிப்பிடித்துக்கொண்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.

மாணவ, மாணவிகளின் பாசப்போராட்டத்தை கண்ட ஆசிரியையும் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அங்கு நடைபெற்ற மாணவர்கள், ஆசிரியையின் பாச போராட்டத்தை கண்ட பெற்றோர்களும், பொதுமக்களும் கண்ணீர் விட்டனர்.

அப்போது ஏழை, எளிய மாணவ-மாணவிகள் படிக்கும் அரசு பள்ளிகளில் ஆட்குறைப்பு என்ற பெயரில் இதுபோன்று ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்வது, அரசு பள்ளிகளை மூடி தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். 

Next Story