சத்துணவு முட்டை வினியோகத்தில் முறைகேடு: தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை


சத்துணவு முட்டை வினியோகத்தில் முறைகேடு: தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
x
தினத்தந்தி 8 July 2018 4:45 AM IST (Updated: 8 July 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

சத்துணவு முட்டை வினியோகத்தில் முறைகேடு புகார் எழுந்ததை தொடர்ந்து தனியார் நிறுவனங்கள், வீடுகளில் வருமான வரித்துறையினர் நேற்று 3-வது நாளாக சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்களை காட்டி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

திருச்செங்கோடு,

தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டைகளை திருச்செங்கோட்டை சேர்ந்த கிறிஷ்டி பிரைடு கிராம் என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த நிறுவனத்துக்கு சொந்தமான தமிழகத்தில் பல பகுதிகள், பெங்களூரு, டெல்லி, மும்பை உள்பட 76 இடங்களில் உள்ள நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள அந்த தனியார் மாவு நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மோர்பாளையத்தில் உள்ள மாவு நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியின் வீடு ஆகியவற்றிலும் சோதனை நடந்தது. இந்த சோதனை விடிய விடிய நடந்தது. இந்த தனியார் நிறுவனங்களின் கணக்குகளை சரிபார்க்கும் திருச்செங்கோடு கூட்டப்பள்ளியை சேர்ந்த ஆடிட்டர் ராமச்சந்திரனின் அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இதேபோல மாவு நிறுவன உரிமையாளர் குமாரசாமியிடமும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள அந்த தனியார் மாவு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும், மோர்பாளையத்தில் உள்ள அந்த தனியார் மாவு நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டிலும், கூட்டப்பள்ளியில் உள்ள ஆடிட்டர் வீட்டிலும் நேற்று 3-வது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை நடந்தது.

அப்போது மேலும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஏற்கனவே அந்த நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் உடுப்பத்தான்புதூர் பகுதியில் தனியார் மாவு நிறுவனத்துக்கு சொந்தமான சத்து மாவு தயாரிக்கும் ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனை நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் நிறைவடைந்தது.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். எனவே நேற்று வழக்கம்போல் அந்த ஆலை இயங்கியது. ஆலைக்கு லாரிகளில் சரக்குகள் வந்து இறங்கின. இதேபோல புதுச்சத்திரத்தில் உள்ள அந்த தனியார் மாவு நிறுவனத்துக்கு சொந்தமான ஆலையில் நேற்று காலை 8 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையை முடித்து விட்டு கிளம்பி சென்றனர். 

Next Story