காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏரிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை அதிகாரி ஆய்வு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏரிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 8 July 2018 3:30 AM IST (Updated: 8 July 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் காவாந்தண்டலம், தென்னேரி மற்றும் படப்பை ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை தலைமை பொறியாளர் ஜெயராமன் ஆய்வு செய்தார்.

வாலாஜாபாத்,


காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவிற்கு உட்பட்ட காவாந்தண்டலம், தென்னேரி மற்றும் ஸ்ரீ பெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட படப்பை உள்ளிட்ட ஏரிகளில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி காவாந்தண்டலத்தில் உள்ள ஏரியில் ரூ.18 லட்சம் செலவில் ஏரியின் கரைகளை அகலப்படுத்துதல், நீர்வரத்து கால்வாய்களை சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோல் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தென்னேரி ஏரியில் ரூ.4 கோடியே 69 லட்சம் செலவில் 7 மதகுகள் பழுது பார்க்கும் பணிகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.


இந்த 2 ஏரிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை சென்னை மண்டல பொதுப்பணித்துறை நீர்வள நிலவள ஆதார அமைப்பு தலைமை பொறியாளர் ஜெயராமன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மழை காலத்துக்கு முன்பு குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மேலும், படப்பை ஏரியில் ரூ.45 லட்சம் செலவில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளையும் தலைமை பொறியாளர் ஜெயராமன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் தியாகராஜன், உதவி செயற்பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், மகேந்திரன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.

Next Story