மானாமதுரை அருகே 4 வழிச்சாலை பணிக்காக கட்டிடங்கள் அகற்றம்


மானாமதுரை அருகே 4 வழிச்சாலை பணிக்காக கட்டிடங்கள் அகற்றம்
x
தினத்தந்தி 7 July 2018 10:45 PM GMT (Updated: 7 July 2018 7:33 PM GMT)

மானாமதுரை அருகே முத்தனேந்தலில் 4 வழிச்சாலை பணிக்காக சாலையோரம் இருந்த வீடு, கடை உள்ளிட்ட கட்டிடங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

மானாமதுரை,

மதுரையில் இருந்து ராமநாதபுரம் வரை 4 வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலான நான்கு வழிச்சாலை பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 90 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. ஆங்காங்கே பாலங்கள் அமைக்கும் பணிகளும், ஒருசில இடங்களில் சாலை விரிவாக்கம் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த 4 வழிச்சாலையில் மதுரையில் இருந்து பரமக்குடி வரை 9 மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. திருப்புவனம், லாடனேந்தல், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட இடங்களில் பைபாஸ் ரோடு அமைக்கப்படுகிறது. இதேபோன்று மானாமதுரை அருகே முத்தனேந்தலில் ஊருக்கு நடுவே நான்கு வழிச்சாலை 45 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது. இதற்காக பாதிக்கப்படும் கட்டிடங்களுக்கான இழப்பீட்டு தொகை ஒதுக்கப்பட்டது. ஆனால் கட்டிட உரிமையாளர்கள் புதிய சட்டத்திருத்தத்தின்படி 3 மடங்கு இழப்பீட்டு தொகை கேட்டு போராடி வருகின்றனர். பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கட்டிடங்கள் அகற்றும் பணி நடைபெற்றது.


சாலையோரம் இருந்த வீடு, கடை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அகற்றப்பட்டன. 4 வழிச்சாலை துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரங்கள் கொண்டு கட்டிடங்கள் அகற்றும் பணி நடைபெற்றது. ஆனால் கூடுதல் இழப்பீட்டு தொகை கேட்டு வழக்கு தொடர்ந்தவர்களின் கட்டிடங்கள் அகற்றப்படவில்லை. இதுகுறித்து 4 வழிச்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், முத்தனேந்தலில் கடந்த 2010-ம் ஆண்டு சாலை அளவீட்டு பணி முடிந்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. கூடுதல் தொகை கோர்ட்டு மூலமாகத்தான் பெற முடியும் என்று பாதிக்கப்பட்டவர்களிடம் விளக்கமாக எடுத்து கூறப்பட்டது. ஆனால் பலரும் இடம் ஒருவர் பெயரிலும், கட்டிடம் ஒருவர் பெயரிலும் வைத்து குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர். இதனாலேயே அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மற்றபடி அரசு ஒதுக்கிய தொகை முழுமையாக கொடுக்கப்பட்டுவிட்டது. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர்களின் கட்டிடங்கள் தீர்ப்பிற்குபின் அகற்றப்படும் என்றனர்.

Next Story