அழிந்து வரும் வான்தீவை காப்பாற்ற அரண் அமைப்பு


அழிந்து வரும் வான்தீவை காப்பாற்ற அரண் அமைப்பு
x
தினத்தந்தி 8 July 2018 4:00 AM IST (Updated: 8 July 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

மன்னார் வளைகுடா கடல்பகுதியில் அழிந்து வரும் நிலையில் உள்ள வான்தீவை அழிவில் இருந்து காப்பாற்றும் வகையில் சிமெண்டு சிலாப்புகள் கடலுக்குள் அமைத்து பாதுகாப்பு அரண் உருவாக்கப் பட்டுஉள்ளது.

ராமநாதபுரம்,

மன்னார் வளைகுடா கடந்த 1986-ல், தேசிய கடல் பூங்காவாகவும், 1989-ல், உயிர்கோள காப்பகமாகவும் அறிவிக்கப்பட்டது. இதில் ராமநாதபுரத்தில் துவங்கி தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி வரை 10,500 சதுர கிலோ மீட்டரில் முன்பு 21 சின்னஞ்சிறிய குட்டி தீவுகள் இருந்தன. அவற்றில் பூவரசன்பட்டி, விலாங்குசல்லி ஆகிய இரண்டு தீவுகள் கடல் அரிப்பு மற்றும் இயற்கை சீற்றம் காரணமாக கடலில் மூழ்கி விட்டன.

இதேபோல வான்தீவு ஆரம்பத்தில் 16 எக்டேர் இருந்த நிலையில் நாளடைவில் கடல் அரிப்பு காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது 2 எக்டேர் அளவிற்கு வந்துவிட்டது. நாளுக்குநாள் அழிவை எட்டிவந்த இந்த வான்தீவை காப்பாற்றும் முயற்சியில் சிறப்பு நிபுணர்கள் ஆலோசணையின்படி அரசு தீவிரமாக இறங்கியது.

இதன்பயனாக தீவு பகுதியை சுற்றிலும் சிமெண்டு சிலாப்புகள் எனப்படும் தொட்டிகள் 3 அடுக்குகளாக அமைக்கப்பட்டன. கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொடங்கிய இந்த பணியின் மூலம் இதுவரை இந்த தீவை சுற்றிலும் 2,500 சிமெண்டு சிலாப்புகள் போடப்பட்டுள்ளன.


ராட்சத கிரேன்கள் மூலம் இந்த சிமெண்டு சிலாப்புகள் கொண்டுவரப்பட்டு சிறப்பு நீச்சல் வீரர்களின் உதவியுடன் சரியான இடத்தில் திட்டமிட்டு இந்த சிலாப்புகள் கடலுக்குள் அமைத்து சுற்றிலும் அரண் ஏற்படுத்தி உள்ளனர். கடல் சீற்றம் தீவை தாக்காதவாறு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த சிலாப்புகளில் பவளப்பாறைகளை வளரச்செய்து இயற்கை தடுப்பு அரணாக மாற்றப்பட்டுள்ளது. 3 கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த பணி ஏறத்தாழ முடியும் தருவாயில் உள்ளது.

இதன்பயனாக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அழிவை நோக்கி சென்று கொண்டிருந்த வான்தீவு இறுதியாக இருந்த 2 எக்டேர் பரப்பளவில் தற்போதுவரை தொடர்ந்து இருந்து வருகிறது. மேலும், அந்த பகுதிகளில் பவளப்பாறைகள் நன்கு வளர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தீவை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றுள்ளதால் இதேபோன்று அழிந்துவரும் தீவுகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Next Story