மின் இணைப்புக்கான வைப்புத்தொகையை 5 சதவீதம் உயர்த்த பரிசீலனை அமைச்சர் தங்கமணி பேட்டி


மின் இணைப்புக்கான வைப்புத்தொகையை 5 சதவீதம் உயர்த்த பரிசீலனை அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 8 July 2018 4:15 AM IST (Updated: 8 July 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மின் இணைப்புக்கான வைப்பு தொகையை 5 சதவீதம் உயர்த்துவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. இதில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சத்துணவு முட்டை முறைகேடு விவகாரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் யாரும் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கூறவில்லை. சிலர் வேண்டுமென்றே இப்படி ஒரு தகவலை பரப்புகிறார்கள். அதில் உண்மை இல்லை.

குமாரபாளையம் மக்களுக்கு என்னை பற்றி நன்கு தெரிந்ததால் தான் அமைச்சராக இருந்த என்னை 2016-ம் ஆண்டில் மீண்டும் 48 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தனர். டி.டி.வி.தினகரன் முதலில் 135 இடங்களில் நடந்த சோதனை குறித்து பதில் சொல்லட்டும், அதன் பின்னர் நான் பதில் சொல்கிறேன்.

தமிழகத்தில் மின் இணைப்புக்கான வைப்பு தொகையை 5 சதவீதம் உயர்த்துவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. முழுமையாக முடிவான பிறகு அது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இளநிலை பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு 960 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆகஸ்டு மாதத்தில் இப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். 

Next Story