குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.
தென்காசி,
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.
குற்றாலம் சீசன்நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த ஆண்டு சீசன் மே மாத இறுதியிலேயே தொடங்கியது. தொடங்கிய நாள் முதல் சில நாட்கள் சீசன் களை கட்டியது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது.
இதனை அறிந்த சுற்றுலா பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கானோர் குற்றாலம் வந்து குளித்து செல்கிறார்கள். கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் சாரல் மழை இல்லை. கடும் வெயில் அடித்தது. பலத்த காற்று வீசுகிறது. மாலைக்கு மேல் குளுமையான சூழல் நிலவுகிறது.
நீண்ட வரிசையில்...மழை இல்லாததால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறைந்தது. மெயின் அருவியில் வெகுவாகவே தண்ணீர் குறைந்து விட்டது. ஐந்தருவியில் 3 கிளைகளில் மட்டும் தண்ணீர் சுமாராக விழுந்தது. பழைய குற்றாலத்திலும் குறைவாகவே தண்ணீர் விழுகிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
அருவிகளில் குறைவாக தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் திருப்தி இல்லாமல் குளித்து சென்றனர். பலர் கேரளாவில் உள்ள பாலருவி போன்ற இடங்களுக்கு சென்றனர்.