கோத்தகிரி பேரூராட்சி மாதிரி வார்டுகளில் தெருவிளக்கு, குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்படும் அதிகாரி தகவல்
கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட மாதிரி வார்டுகளில் தெரு விளக்கு, குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்படும் என்று அதிகாரி கூறினார்.
கோத்தகிரி,
கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளிலிருந்து முதற்கட்டமாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணியை செயல்படுத்த காமராஜ் நகர், கல்பனா காட்டேஜ், தவிட்டு மேடு மற்றும் புது கோத்தகிரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 1, 6, 13 மற்றும் 16-வது வார்டுகள் பேரூராட்சியால் தேர்வு செய்யப்பட்டன.
இந்த வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது. இந்த முகாமை பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு நீர் மற்றும் சுத்திகரிப்பு திட்ட பயிற்சியாளர் எபினேசர் கென்னடி கலந்து கொண்டு சுகாதார பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தார்.
பயிற்சி முகாமில், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வீடு வீடாக சேகரிப்பது, அந்தந்த தெருக்களில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களை ஒன்று திரட்டி பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
இது சம்பந்தமான கூட்டம் நடத்தி, பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தனிநபர் கழிப்பிடத்தால் ஏற்படும் நன்மைகள், ஆரோக்கியமான உணவு ஆகியவை குறித்து விளக்கம் அளித்தல், பொது சுகாதாரம் குறித்து பள்ளி மாணவர்களிடையே கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் கூறும்போது,
மாதிரி வார்டுகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைப் பணி செயல் படுத்துவதன் மூலம், தெருவிளக்கு, குடிநீர், கழிவு நீர் கால்வாய் வசதிகள் மேம்படு்த்தப்படும். அடிப்படை சுகாதார வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் படிப்படியாக கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளிலும் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி கோத்தகிரி பேரூராட்சியை முன் மாதிரி நகரமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த உரிய நிதி ஒதுக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அவர்கூறினார்.
பயிற்சி முகாமில் சுகாதார பணியாளர்கள், பரப்புரையாளர்கள் மற்றும் சுய உதவி குழுவினர் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் கண்ணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story