திருப்பூர் கே.எஸ்.சி. அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
திருப்பூரில் உள்ள கே.எஸ்.சி. அரசு பள்ளியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட 230 மாணவர்கள் அதிகம் சேர்ந்துள்ளனர்.
திருப்பூர்,
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. பெற்றோரின் ஆங்கில மோகத்தால் மெட்ரிக் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் சென்றதால் அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்விமுறை தொடங்கப்பட்டது.
ஆனாலும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வசதிபடைத்தவர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் மெட்ரிக் பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் படிப்பதையே கவுரவமாக நினைக்கிறார்கள். அது மட்டுமா அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் கூட தனியார் பள்ளியில் படிக்கும் அவலம் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதனால் அரசு எதிர்பார்த்தபடி மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கவில்லை. தமிழ்நாட்டில் பல பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்களே படிக்கும் நிலை உள்ளது.
பல அரசு பள்ளிகளின் நிலை இவ்வாறு இருக்க, திருப்பூரில் உள்ள கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வியில் கடந்த ஆண்டு 2,092 மாணவர்கள் படித்து வந்த நிலையில், இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 2,322 ஆக உயர்ந்துள்ளது. இந்த வகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 230 மாணவர்கள் அதிகம் சேர்ந்துள்ளனர். இது அனைத்து தரப்பினரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்த பள்ளி தொடங்கப்பட்டு சுமார் 100 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், ஆரம்ப காலத்தில் நகராட்சி உயர்நிலைப்பள்ளியாக இருந்துள்ளது. பின்னர் 7-8-1975-ல் இந்த பள்ளியை அரசு எடுத்துக்கொண்டது. இதையடுத்து 21-6-1980 அன்று இந்த பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இருந்தாலும் இந்த பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையை குறையாமல் தக்கவைப்பதே பெரும்பாடாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பள்ளியை சுற்றிலும் 4 மெட்ரிக்பள்ளிகள் செயல்பட்டு வருவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை உயர்வுக்கு காரணம் என்ன? என்பது குறித்து பள்ளி தலைமையாசிரியர் ராஜாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
நான் இந்த பள்ளிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த பள்ளியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கடந்த ஏப்ரல் மாதமே பணியை தொடங்கி விட்டோம். ஆசிரியர்கள் குழுவாக பிரிந்து எங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள செல்லப்பபுரம், அரண்மனைபுதூர், பெரிச்சிபாளையம், முத்துப்புதூர், பழையநகர், நொய்யல்வீதி ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு சென்று தலைமையாசிரியர்களை சந்தித்து மாணவர்களை எங்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டோம்.
மேலும் எங்கள் பள்ளியில் உள்ள வசதிகள் மற்றும் சிறப்புகள் குறித்து பள்ளிக்கு முன்புறம் தட்டியில் எழுதிவைத்தோம். எங்கள் பள்ளி மாணவர்கள் கபடி, ஜூடோ, டேக்வாண்டோ, யோகா போன்ற பல்வேறு போட்டிகளில் மாநில அளவில் சிறப்பு பரிசுகள் பெற்றுள்ளனர். அதிநவீன அறிவியல் ஆய்வகம் தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசு பள்ளிகளிலும் இல்லாத நிலையில் எங்கள் பள்ளியில் தான் உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக எங்கள் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 96 சதவீதமாக உள்ளது. ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி மையம் எங்கள் பள்ளியில் அமைந்துள்ளது. இதுவும் மாணவர் சேர்க்கை அதிகரிக்க ஒரு காரணம் என்று கூறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story