திருப்பூர் மாவட்டத்தில் செல்லாக்காசாகி போன 10 ரூபாய் நாணயம் மீண்டும் பொதுமக்கள் கைகளில் தவழுமா?
திருப்பூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை கடைக்காரர்கள் வாங்க மறுப்பதால் அது செல்லாக்காசாகி போய் விட்டது. மீண்டும் கைகளில் தவழுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.
திருப்பூர்,
‘பணத்தை எங்கே தேடுவேன்...’ என்ற சினிமா பாடலை போல், மனிதன் பணத்தேவைக்காகவே இயங்கிக்கொண்டிருக்கிறான். பணம் சம்பாதிப்பதற்காக கிடைத்த வேலையை செய்து பிழைப்பு நடத்தி வருகிறான். நாணயங்களில் இருந்து நோட்டுகளாக பணம் பரிணாமம் அடைந்தது. நோட்டுகள் விரைவில் கிழிந்து விடும் என்பதால் அதிக மதிப்புடைய நாணயங்களை மீண்டும் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் 10 ரூபாய் நாணயங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புழக்கத்தில் விடப்பட்டது.
தொடக்கத்தில் போட்டிப்போட்டு 10 ரூபாய் நாணயங்களை வாங்கிய திருப்பூர் மாவட்ட மக்கள், தற்போது 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற முடிவுக்கே வந்து விட்டனர். இதற்கு காரணம் கடைக்காரர்கள் முதல் அரசு மற்றும் தனியார் பஸ் கண்டக்டர்கள் வரை 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து விடுகிறார்கள். வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பப்பட்ட வதந்தியால் திருப்பூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாக்காசாக போய் விட்டது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்கள் தற்போதும் புழக்கத்தில் உள்ளது. அதிலும் 10 ரூபாய் செல்லாது என்ற வதந்தி பிற மாவட்டங்களை விட திருப்பூர் மாவட்ட மக்களிடம் தீயாக பரவி விட்டது. பின்னலாடை நகரான திருப்பூரில் வெளிமாவட்டங்களில் இருந்து அதிகப்படியான தொழிலாளர்கள் வந்து தங்கி பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக தென்மாவட்டங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் அதிகம்பேர் உள்ளனர். இவர்கள் சொந்த ஊருக்கு சென்றால் அங்கு 10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள், கடைக்காரர்கள், பஸ் கண்டக்டர்கள் கொடுக்கிறார்கள். ஆனால் அந்த நாணயங்களை திருப்பூருக்கு கொண்டு வந்தால் வாங்க மறுத்து விடுகிறார்கள். இதனால் தாங்கள் வைத்துள்ள 10 ரூபாய் நாணயங்களை சொந்த ஊருக்கு செல்லும் போது தான் மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் உள்ள மளிகை கடை, டீக்கடை, பேக்கரி, உணவகம், வர்த்தக நிறுவனங்களில் கூட 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள். அதையும் மீறி 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தால், 10 ரூபாய் நோட்டு இருந்தால் கொடுங்கள் என்று கேட்டு வாங்குகிறார்கள். இந்த நாணயம் செல்லுபடியாகும் என்று பொதுமக்கள் வாதிட்டாலும், வணிகர்கள் வாங்க மறுக்கிறார்கள்.
10 ரூபாய் நாணயங்களை வாங்காமல் இருக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது ரிசர்வ் வங்கி உத்தரவை மீறுவதற்கு சமமாகும். 10 ரூபாய் நாணயத்தை எங்கும் வாங்காமல் இருப்பதால் ஒரு கட்டத்தில் பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடமும் முறையிட்டனர். 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும், அனைவரும் அதை வாங்க வேண்டும் என்று கலெக்டர் அறிவிப்பு விடுத்தார். இருப்பினும் இதுவரை 10 ரூபாய் நாணயத்தை கண்டால் பலரும் தலைதெரிக்க ஓடுவதைத்தான் பார்க்க முடிகிறது.
10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தியை நம்பிய பொதுமக்கள், அந்த நாணயத்தை வங்கிகளில் கொடுத்து விடுகிறார்கள். இதனால் பொதுமக்களிடம் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இல்லாமல் போய் வருகிறது. இந்த நாணயங்கள் செல்லுபடியாகும் என்று பலமுறை அறிவித்த பின்பும் வணிகர்கள், பொதுமக்கள் தயங்குவதால் திருப்பூர் மாவட்டத்தில் புழக்கம் குறைந்து விட்டது என்று வங்கி அதிகாரிகள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட நாணயம் ஒரு மாநிலத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இங்கு செல்லாக்காசாக போய்விட்டதே என்று திருப்பூர் மாவட்ட மக்கள் புலம்பி வருகிறார்கள். 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும் என்பதை வங்கி அதிகாரிகள் பொதுமக்களிடம் நன்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வணிகர்கள், அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும். அப்போது தான் 10 ரூபாய் நாணயம் திருப்பூர் மாவட்ட மக்களின் கைகளில் மீண்டும் தவழும் வாய்ப்புள்ளது. அனைத்து தரப்பினரும் மறுக்காமல் 10 ரூபாய் நாணயங்களை பெற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
Related Tags :
Next Story