திருப்பூரில் லாட்டரி சீட்டு விற்ற 8 பேர் கைது; மொபட் பறிமுதல்


திருப்பூரில் லாட்டரி சீட்டு விற்ற 8 பேர் கைது; மொபட் பறிமுதல்
x
தினத்தந்தி 7 July 2018 10:15 PM GMT (Updated: 7 July 2018 9:02 PM GMT)

திருப்பூரில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 8 பேரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ஒரு மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்,

திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி திருப்பூர் தாராபுரம் ரோடு 60 அடி ரோடு மற்றும் வெள்ளியங்காடு நால்ரோடு பகுதியிலுள்ள மறைவிடத்தில் வைத்து லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக திருப்பூர் 60 அடி ரோடு பகுதியை சேர்ந்த குப்புசாமி(வயது 47) மற்றும் செந்தில்(45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதுபோல் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பூர் முனியப்பன்கோவில் பகுதி மற்றும் ராதாநகர் பகுதியில் உள்ள பழைய கட்டிடத்தின் உள்ளே வைத்து லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அந்த பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்த ராமநாதன்(23), குன்னூர் விருமாண்டம்பாளையத்தை சேர்ந்த பாலன்(24), பாளையக்காடு பகுதியை சேர்ந்த நாகராஜன்(58), ராஜமாணிக்கம் (23), கோவையை சேர்ந்த செந்தில், ராதாநகர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் நாயக்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், இவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளையும் ரூ.27 ஆயிரத்து 87-ஐயும், ஒரு மொபட் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story