சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 July 2018 3:25 AM IST (Updated: 8 July 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கக்கோரி கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.


கோவை,

ஓய்வூதியம், சம வேலைக்கு, சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு ரேஷன்கடை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதற்கு மாநில பொருளாளர் நாகராஜ், அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் உமா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் காளியப்பன் தலைமை தாங்கி பேசியதாவது:-

கூட்டுறவு ரேஷன் கடையில் கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளர்களுக்கு தற்போது அதிகபட்சமாக ரூ.16 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கடை பணியாளர்கள் போதிய வருமானம் இன்றி சிரமப்படுகின்றனர். எனவே ரேஷன் கடை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும்.

ஒரு கடையில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தேவையான பொருட்களை முழு அளவில் ஒதுக்கீடு செய்வதோடு, எடை குறையாமல் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் கிடங்கு வசதி, மின் இணைப்பு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

ரேஷன் கடை நடத்தி வரும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள மானியத்தொகையை உடனடியாக அரசு வழங்க வேண்டும். கடைகளில் சரக்கு இருப்பு குறைந்தால் அபராதம் வசூல் செய்வதை கைவிட வேண்டும். ரேஷன்கடை அனைத்து பணியாளர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ரேஷன்கடைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு துறை பதிவு அடிப்படையில் பணியமர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் கனகசபாபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பிரமணியம், பாலு, முருகேசன், மகேஷ் உள்பட கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story