கோவை மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பதப்படுத்தப்பட்ட மீன்கள் விற்பனையா?
கோவை மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பதப்படுத்தப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கோவை,
கேரள மாநிலத்தில், ஆய்வகங்களில் உடல் உறுப்புகள் கெடாமல் பாதுகாக்க பயன்படுத்தப்படும் ரசாயனம் மூலம் மீன்கள் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து அந்த மாநில சுகாதார துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் கோவை உக்கடம் மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பதப்படுத்தப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயலலிதாம்பிகை, மீன் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் கொழுஞ்சி வளவன் மற்றும் அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது ஒரு சில கடைகளில் 10 கிலோ அளவுக்கு கெட்டுப்போன மீன்கள் இருந்தன. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-
கேரளாவில் ரசாயனம் மூலம் பதப்படுத்தப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் கோவை உக்கடம் மார்க்கெட்டில் ஆய்வு செய்யப்பட்டது. இங்கு மீன்கள் விற்பனை செய்யும் கடைகள் மொத்தம் 44 உள்ளன. இதில் ராமேசுவரம் பகுதியில் இருந்து மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
கேரளாவில் தற்போது மீன் பிடி தடைகாலம் உள்ளதால் அங்கிருந்து மீன்கள் எதுவும் விற்பனைக்கு கொண்டுவரப்பட வில்லை. கோவையில் ரசாயனம் மூலம் பதப்படுத்தப்பட்ட மீன்கள் எதுவும் விற்பனை செய்யப்பட வில்லை. ஆய்வகங்களில் உடல் உறுப்புகள் கெடாமல் பாதுகாக்க பயன்படும் ரசாயனம் மூலம் மீன்களை பதப்படுத்தினால் அதிக அளவு ரசாயன வாடை அடிக்கும்.
மேலும் மீன்களின் காதில் உள்ள செதில்களை தூக்கி பார்க்கும் போது நல்ல சிகப்பு நிறத்தில் இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும், வெளிறி காணப்பட்டால் அந்த மீன் கெட்டுப்போனது என்று அறிந்து கொள்ளலாம். இதுபோன்ற ரசாயனம் கலந்து மீன்களை சாப்பிடும்போது உடல் உபாதைகள் ஏற்படும். வியாபாரிகள் யாராவது ரசாயனம் மூலம் பதப்படுத்தப்பட்ட மீன்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story