குமட்டாவில் அரசு பஸ்–லாரி மோதல் 3 பேர் உடல் நசுங்கி சாவு மேலும் 6 பேரின் உடல் நிலை கவலைக்கிடம்


குமட்டாவில் அரசு பஸ்–லாரி மோதல் 3 பேர் உடல் நசுங்கி சாவு மேலும் 6 பேரின் உடல் நிலை கவலைக்கிடம்
x
தினத்தந்தி 8 July 2018 4:00 AM IST (Updated: 8 July 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

குமட்டாவில் அரசு பஸ்–லாரி மோதிய விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மங்களூரு,

குமட்டாவில் அரசு பஸ்–லாரி மோதிய விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

3 பேர் சாவு

உத்தரகன்னடா மாவட்டம் குமட்டாவில் இருந்து அங்கோலா நோக்கி நேற்று மாலை கர்நாடக அரசு பஸ் (கே.எஸ்.ஆர்.டி.சி.) புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இதில் 40 பயணிகள் இருந்தனர். அந்த பஸ் மாலை 5 மணி அளவில் கோகர்ணா பகுதியில் சென்றபோது, பஸ்சும், எதிரே மின்கம்பங்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பஸ் முற்றிலும் உருக்குலைந்தது. இதில், பஸ்சின் இடிபாடுகளிடையே சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 12 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த விபத்தை பார்த்ததும், அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து உயிருக்கு போராடிய 12 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குமட்டா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

6 பேரின் உடல் நிலை கவலைக்கிடம்

ஆனால் 6 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கார்வார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனாலும் அவர்களின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகளும், குமட்டா போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் அவர்கள், விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமட்டா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியானவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் விவரங்கள் உடனடியாக போலீசாருக்கு கிடைக்கவில்லை.

போலீஸ் விசாரணை

இதையடுத்து போலீசார் விபத்துக்குள்ளான அரசு பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதுகுறித்து குமட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story