ஸ்டெர்லைட் பிரச்சினைக்கு பிறகு தமிழகத்தில் அறவழி போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது தமிழ் புலிகள் கட்சி தலைவர் குற்றச்சாட்டு
ஸ்டெர்லைட் பிரச்சினைக்கு பின்னர் தமிழகத்தில் அறவழி போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு,
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை ஒரு சர்வாதிகார ஆட்சி நடப்பதுபோன்றே தோன்றுகிறது. 8 வழிச்சாலை திட்டம் என்பது மக்கள் விரோத திட்டம், மக்களுக்கு வேண்டாத திட்டத்தை தங்கள் சுயலாபத்துக்காக அரசு மக்கள் மீது திணிக்கிறது.
ஸ்டெர்லைட் பிரச்சினைக்கு பின்னர், தமிழகத்தில் அறவழி போராட்டங்களுக்கு அனுமதி இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. கருத்து சுதந்திரத்தை முடக்கும் அடக்குமுறை ஆட்சி நடந்து வருகிறது. 8 வழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் மத்திய அரசு நிறைவேற்றும் என்று மத்திய மந்திரி கூறுகிறார். இது தமிழக அரசை மிரட்டுவதாக இருக்கிறது.
மேலும், தற்போது தமிழக அரசு அ.தி.மு.க.வினரின் கையில் இல்லை. பா.ஜனதாவின் மத்திய அரசு தமிழக அரசு நிர்வாகத்தை நேரடியாக செயல்படுத்துவது போன்று உள்ளது. எனவேதான் மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து போராடும் சமூக ஆர்வலர்களை உடனடியாக கைது செய்து, மற்ற சமூக ஆர்வலர்களை மிரட்டி வருகிறார்கள். அறவழியில் மக்கள் பிரச்சினைகளுக்காக ஆர்ப்பாட்டங்கள் நடத்தக்கூட தமிழக போலீசார் அனுமதி மறுக்கிறார்கள்.
இந்த நிலை இப்படியே நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாடு தமிழர்களின் கையில் இருக்காது. மக்களுக்கான அழிவு திட்டங்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வந்து கொண்டே இருக்கிறது. எனவே மக்கள் விழிப்படைய வேண்டும். இன்னொரு சுதந்திர போராட்டத்துக்கு மக்கள் தயாராக வேண்டும்.
இவ்வாறு தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் கூறினார்.
முன்னதாக நடந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்ட செயலாளர் ரா.சிந்தனை செல்வன், துணை செயலாளர்கள் அழகுமணி, செம்பன், கொள்கை பரப்பு செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட பொறுப்பாளர்கள் பிரவீன்குமார், பொன்னுசாமி, ஒன்றிய செயலாளர் கார்த்திக், பகுதி செயலாளர் ராகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story