மண்டியா மாவட்டத்தில் கடன் தள்ளுபடி திட்டத்தில் 2.49 லட்சம் விவசாயிகள் பயன்பெற வாய்ப்பு
அரசின் கடன் தள்ளுபடி திட்டத்தில் மண்டியா மாவட்டத்தில் 2.49 லட்சம் விவசாயிகள் பயன்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மண்டியா,
அரசின் கடன் தள்ளுபடி திட்டத்தில் மண்டியா மாவட்டத்தில் 2.49 லட்சம் விவசாயிகள் பயன்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
2.49 லட்சம் விவசாயிகள்
கர்நாடக சட்டசபையில் கடந்த 5-ந்தேதி முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் மாநிலம் முழுவதும் உள்ள தேசிய, கூட்டுறவு, தனியார் வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.34 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கடன் தள்ளுபடி திட்டத்தில் அரசு ஊழியர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றுபவர்களின் குடும்பத்தினர், கடந்த 3 ஆண்டாக வருமானவரி செலுத்தி வரும் விவசாயிகள் பயன்பெற முடியாது என கூறப்பட்டுள்ளது. அதுபோல் விவசாயிகள் வாங்கியுள்ள வேறு கடன்களும் தள்ளுபடி ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக அரசின் கடன் தள்ளுபடி திட்டத்தில் மண்டியா மாவட்டத்தில் 2 லட்சத்து 49 ஆயிரம் விவசாயிகள் பயன்பெற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மண்டியா மாவட்டத்தில் கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை சிறு, குறு விவசாயிகள் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.6,121 கோடியை கடனாக பெற்றுள்ளனர். இதில், ரூ.1,100 கோடி தங்க நகை கடன்களும் அடக்கம்.
சுமார் 300 வங்கிகளில் கடன்
அதாவது, மாவட்டத்தில் உள்ள தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள், கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என சுமார் 300 வங்கி கிளைகளில் விவசாயிகள் பயிர்க்கடன் பெற்றுள்ளனர். இங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மட்டும் ரூ.2,601.49 கோடி பயிர் கடன் விவ சாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் தனியார் வங்கிகளில் ரூ.135 கோடியும், கிராம வங்கிகளில் ரூ.433.89 கோடியும், மத்திய கூட்டுறவு வங்கிகளில் இருந்து ரூ.850 கோடியும் பயிர்க்கடன் விவசாயிகள் வாங்கியுள்ளனர்.
மேலும் விவசாயிகள் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.1,100 கோடி தங்க நகை கடன்களை பெற்றுள்ளனர். இதுதவிர தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பெற்று விவசாயிகள் பயிர்சாகுபடி செய்துள்ளனர். இருப்பினும் தங்க நகைக்கடன், அரசின் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் வராது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசிதழில் அறிவிப்பு வெளியீடுவது எப்போது?
இதுகுறித்து விஜயா வங்கி மேலாளர் என்.ஜி.பிரபுதேவ் கூறுகையில், மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 49 ஆயிரம் விவசாயிகள் வங்கிகளில் இருந்து பயிர்க்கடன், தங்க நகை கடன் என மொத்தம் ரூ.6,121 கோடி வாங்கியுள்ளனர். இதில் 10 சதவீதம் பேர் மட்டுமே முறையாக வட்டியுடன் கடனை திரும்ப செலுத்துகிறார்கள். கர்நாடக அரசு விவசாய கடன் தள்ளுபடி பற்றி பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. ஆனால் அரசு அதுதொடர்பான அறிவிப்பை, அரசிதழில் வெளியிடவில்லை. அதற்காக காத்திருக்கிறோம். அநேகமாக இந்த மாத இறுதிக்குள் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக அரசிதழில் மாநில அரசு வெளியிடலாம் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
போராட்டம்
இந்த நிலையில் மண்டியாவில் உள்ள ஸ்டேட் வங்கி கிளை முன்பு விவசாயிகள் தங்க நகைகளை வைத்து வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.
இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு, தங்க நகை கடனையும் தள்ளுபடி செய்ய கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story