ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் கலெக்டர்- எம்.எல்.ஏ. ஆய்வு
அறச்சலூர் அருகே ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், மொடக்குறிச்சி வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
அறச்சலூர்,
தீரன் சின்னமலை நினைவு நாள் அரசு சார்பில் ஆண்டுதோறும் ஆடி பெருக்கு அன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் உள்ள அவருடைய உருவ சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுவதுடன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்.
இந்த ஆண்டு தீரன் சின்னமலை நினைவுநாள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஓடாநிலைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் வந்து கலந்து கொள்ள உள்ளனர். அப்போது ஏராளமான வாகனங்கள் ஓடாநிலைக்கு வரும். எனவே போக்குவரத்து இடையூறு இல்லாமல் ஓடாநிலைக்கு பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஓடாநிலையில் தீரன் சின்னமலை மணி மண்டபத்துக்கு நேற்று மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், மொடக்குறிச்சி வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. ஆகியோர் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், அரசின் சார்பில் செய்யப்படவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். ஆய்வின்போது ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதா தேவி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆர்.பி.கதிர்வேல், பேரூர் செயலாளர் விஜயகுமார், ஆவின் இயக்குனர் அசோக், மொடக்குறிச்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story