இலவச அரிசி கொடுப்பதால் பட்டினி இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
இலவச அரிசி கொடுப்பதால் பட்டினி இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் வாக்குகளால் தமிழகம் முழுவதும் வெற்றிபெற்று, ஜெயலலிதா முதல்-அமைச்சரானார். தெய்வாதீனமாக அந்த தாய் நம்மிடம் இல்லாத சூழல் ஏற்பட்டது. அவருடைய அருளால் 17 மாதங்களாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் சிறப்பான ஆட்சி நடக்கிறது.
சட்டசபையில் 110-வது விதியின் கீழ் 175 திட்டங்களை ஜெயலலிதா அறிவித்தார். அதில் 173 திட்டங்கள் முடிந்துள்ளன. மீதமுள்ள 2 திட்டங்களுக்கும் பணிகள் நடக்கின்றன. யாரும், யாரையும் ஏமாற்றி விட முடியாது. வேடமிட்டு, தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்து, விழா நடத்தி ஏமாற்ற முடியாது. மக்களிடம் திட்டங்கள் போய் சேர்ந்தால் தான் வளர்ச்சி பெற முடியும்.
ஜெயலலிதாவை போன்று எடப்பாடி பழனிசாமியும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்களை நிறைவேற்றுகிறார். 17 மாதங்களில் எத்தனையோ நல்ல திட்டங் களை நிறைவேற்றி இருக்கிறார். மக்களை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ‘சீல்’ வைத்தார். தமிழகத்தில் இலவசமாக அரிசி கொடுப்பதால் பஞ்சம், பட்டினி இல்லாத மாநிலமாக திகழ்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து 123 பேருக்கு வீட்டுமனை பட்டா, 173 பேருக்கு விபத்து நிவாரணமாக ரூ.1 கோடியே 76 லட்சம், தொழில் மேம்பாட்டு திட்டத்தில் ஒருவருக்கு ரூ.25 லட்சம் மானியம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் உள்பட மொத்தம் 2 ஆயிரம் பேருக்கு ரூ.3 கோடியே 2 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். பின்னர் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் 11 புதிய பஸ்களின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் உதயகுமார் எம்.பி., பரமசிவம் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, முன்னாள் மேயர் மருதராஜ், மாநகராட்சி கமிஷனர் மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story