மாவட்ட செய்திகள்

தேர்வுக்கு உதவும் உள்ளம் + "||" + Help in Exam

தேர்வுக்கு உதவும் உள்ளம்

தேர்வுக்கு உதவும் உள்ளம்
பார்வையற்ற மற்றும் எழுத முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுதும் உதவியாளராக செயல்பட்டு வருகிறார், புஷ்பா பிரியா.
 புஷ்பா பிரியா கடந்த 10 ஆண்டுகளாக இந்த பணியில் ஈடுபட்டு வரும் இவர், இதுவரை மாணவர்களுக்காக 681 தேர்வுகள் எழுதியிருக்கிறார். ஏழ்மை நிலையில் இருக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவசமாகவே இந்த சேவையை செய்து வருகிறார்.


புஷ்பா 7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பணம் செலுத்தமுடியாமல் ஒரு வருடம் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியிருக்கிறார். அப்போது, தேர்வு எழுத முடியாமல் போன மன வேதனையை உணர்வுபூர்வமாக உணர்ந்ததே இந்த சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதற்கு காரணம் என்கிறார்.

‘‘நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். நான் 7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது என் தந்தை படுத்தபடுக்கையாக இருந்தார். என் அம்மாவால் மாதம் 500 ரூபாய்தான் சம்பாதிக்க முடிந்தது. அதனால் குடும்ப செலவையும், தந்தையின் மருத்துவ செலவையும் சமாளிக்க சிரமப்பட்டார். ஆகவே பள்ளிக்கட்டணம் செலுத்தமுடியாமல் நானும், என் சகோதரனும் ஓராண்டு பள்ளிக்கூடம் செல்லவில்லை. எங்கள் நிலைமையை பார்த்து வேதனைப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர் நாங்கள் படிப்பை தொடர உதவி செய்தார்.

அவர் அன்று எனக்கு செய்த உதவியை இன்று மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நான் செய்து கொண்டிருக்கிறேன். முதன்முதலாக பார்வையற்ற 10-ம் வகுப்பு மாணவிக்கு தேர்வு எழுதி கொடுத்தேன். அப்போதுதான் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் சவால்களை புரிந்து கொண்டேன். என்னால் தொடர்ந்து அவர்களுக்கு உதவ முடியாது என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர்களுடைய குடும்ப சூழ்நிலையும், அவர்கள் படிப்பு மீது கொண்டிருக்கும் ஆர்வமும், தொடர்ந்து என்னை தேர்வு எழுத வைத்துக்கொண்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் திறமையானவர்கள். அவர்களின் திறமையை வெளிக்காட்டுவதற்கு நான் உதவுகிறேன்’’ என்கிறார்.

புஷ்பா, பெங்களூருவில் வசித்து வருகிறார். கஷ்டப்பட்டு டிப்ளமோ படித்துவிட்டு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இன்று தான் நல்ல நிலையில் இருப்பதற்கு படித்த படிப்பும், அதற்காக மற்றவர்கள் செய்த உதவியும் தான் காரணம் என்கிறார். தனது அலுவலக பணிக்கு மத்தியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுதுவதற்கு நேரத்தை ஒதுக்கிக் கொள்கிறார். பாடமும் சொல்லிக்கொடுக்கிறார்.

‘‘பெரும்பாலும் தேர்வுகள் காலையில்தான் இருக்கும். அன்றைய தினம் அலுவலகத்தில் அனுமதி பெற்று தேர்வு எழுத சென்று விடுவேன். பின்னர் மதியம் திரும்பி வந்து இரவு வரை வேலை பார்த்து பணி நேரத்தை ஈடுசெய்து விடுவேன். விடுமுறை நாட்களில் தேர்வு எழுதுவது மிகவும் சவுகரியமாக இருக்கும். நான் 6 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர்கள் வரை உள்ளவர்களுக்கும், அனைத்துவிதமான பாடங்களுக்கும் தேர்வு எழுதியிருக்கிறேன். சில சமயங்களில் ஒரே மாதிரியான வினாக்களுக்கு பல முறை பதில் எழுதி இருக்கிறேன். சிறுவர்கள் மற்றும் சில பெரியவர்கள் கேள்விக்கு விடை சொல்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். அதை பொறுமையாகக் கேட்டு நான் எழுதுவேன். குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்களுக்கு தேர்வு எழுதி முடிப்பது சவாலான விஷயம்’’ என்கிறார்.