அன்று: பாலியல் கொடுமை இன்று: வழிகாட்டும் தலைமை


அன்று: பாலியல் கொடுமை இன்று: வழிகாட்டும் தலைமை
x
தினத்தந்தி 8 July 2018 4:46 PM IST (Updated: 8 July 2018 4:46 PM IST)
t-max-icont-min-icon

பீகார் மாநிலத்தை சேர்ந்த பாத்திமா கதூன் சிறுவயதிலே ‘மனைவியாக்கப் பட்டு’ விபசார கும்பலிடம் சிக்கியவர்.

பாத்திமா கதூன் அங்கிருந்து தான் மீண்டதோடு, வேறு பல பெண்களையும் காப்பாற்றி கரை சேர்த்துக் கொண்டிருக்கிறார். இவரது தைரியத்தையும், சேைவயையும் பாராட்டி விருதுகள் கொடுத்து கவுரவிக்கிறார்கள். பிரபல நடிகர், நடிகைகளும் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

பாத்திமா தனது சொந்த கதையை சொல்கிறார்:

“நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். பெற்றோர் என்னை பாரமாக நினைத்து, எனது ஒன்பது வயதிலே என்னைவிட மூன்று மடங்கு வயது அதிகமானவருக்கு திருமணம் செய்துவைத்துவிட்டார்கள். திருமணம் என்றால் என்னவென்றே தெரியாததால் நான் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. ஏதேதோ சடங்கு சம்பிர தாயங்கள் நடந்தன. வெகுளித்தனத்தோடு நான் அனைத்திலும் கலந்து கொண்டேன். எல்லாம் முடிந்த பிறகு, ‘வா நம் வீட்டிற்கு போகலாம்’ என்று அழைத்தார்கள். அப்போது தான் நடந்து முடிந்த விபரீதத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

நான் அவர்கள் வீட்டிற்கு சென்றேன். என்னை அவர்கள் குடும்பத்து சொத்து என்றார்கள். எனக்கு அதற்கு அர்த்தம் தெரியவில்லை. எந்த சொத்தாக இருந்தாலும் அது விலைகொடுத்துதானே வாங்கப்படும். நானும் விலைகொடுத்துதான் வாங்கப்பட்டிருக்கிறேன் என்பது அதன் பிறகுதான் தெரிந்தது. எனது பெற்றோர் என்னை பணத்துக்கு விற்றிருக்கிறார்கள். அந்த புதிய வீடு எனக்கு பலவிதங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியது. அங்கு நடப்பதெல்லாம் மர்மமாக இருந்தது.

என் அறைக்கு பக்கத்திலுள்ள அறையில் பல பெண்கள் கூடியிருப்பார்கள். அலங்காரத்தோடு இருக்கும் அவர்களை பார்க்கும்போது எனக்கு வித்தியாசமாக தெரிந்தது. என் மாமியாரிடம், ‘இந்த பெண்கள் எல்லாம் யார்? நமது வீட்டில் ஏதாவது விசேஷம் நடக்கப்போகிறதா?’ என்று கேட்டேன். ‘அதெல்லாம் உனக்கு இப்போ புரியாது.. போய் வேலையைப் பார்’ என்றார். நாளுக்கு நாள் என் குழப்பம் அதிகரித்தது.

ஒரு நாள், எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கும் பெண் ஒருவர் என்னிடம் ரகசியமாக, ‘உன் மாமியார் பல வருடங்களாக பெண்களை வைத்து விபசாரம் செய்து கொண்டிருக்கிறார். உன் கணவரும் அதற்கு உடந்தையாக இருக்கிறார். உன்னையும் அதற்குதான் இங்கு அழைத்து வந்திருக்கிறார்கள். ஊருக்குள் இருக்கும் எல்லா பெரிய மனிதர்களும் உன் மாமியாரோடு அந்த தொழிலில் தொடர்பில் இருக்கிறார்கள். அதனால் யாரும் இதை தடுக்க முயற்சிப்பதில்லை. இதில் உன் மாமியார் நிறைய பணம் சம்பாதிக்கிறார். உன் கணவர் எந்த வேலைக்கும் போவதில்லை. அவர் ஊருக்குள் பெரிய மனிதர்போல் நடமாடிக் கொண்டிருக்கிறார். இவர் களைத் தட்டிக் கேட்க ஆளில்லை.

விபசாரத்தில் சம்பாதிக்கும் பணத்தை ஊரில் உள்ள ஏழைகளுக்கு கந்துவட்டிக்கு கொடுக்கிறார்கள். வாங்கிய பணத்துக்கு வட்டி கட்டமுடியாவிட்டால், அந்த வீட்டு பெண்களையும் மிரட்டி பாலியல் தொழிலுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். உன் வீட்டில் பல்வேறு அறைகளில் நிறைய பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை அடித்து உதைத்து தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். அந்த பெண்களை எல்லாம் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். இந்த உண்மை தெரியாமல் நீயும் வந்து இவர்களிடம் மாட்டிக்கொண்டிருக்கிறாய்’ என்று சொன்னார்.

நான் அதிர்ந்து போனேன். கொடுமைக்காரர்களிடம் வந்து மாட்டிக் கொண்டோமே என்று அழுதேன். என் மாமியாரிடம் சென்று, நீங்கள் பாலியல் தொழில் செய்வதாக அனைவரும் சொல்கிறார்களே என்று கேட்டேன். ‘ஆமாண்டி அதுக்கென்ன இப்போ? மற்றவைகளைபோல இதுவும் ஒரு தொழில்தான். அரசாங்கமே இந்த தொழிலை நடந்த சில இடங்களில் அனுமதி கொடுத்திருக்கு. இந்த ஊரில் யாரும் எங்களுக்கு எதிராக மூச்சுகூட விடமாட்டார்கள். எதிர்த்தால் அவர்கள் மூச்சு நின்னுடும் என்பது அவர்களுக்கே தெரியும். நீ இந்த மாதிரி கேள்விகளை எல்லாம் இனிமேல் என்னிடம் கேட்காதே. உன்னையும் காலிபண்ணிடுவோம்’ என்றார்.

எனக்குப் பிடிக்காத அந்த வாழ்க்கையை விட்டு ஓட முயற்சித்தேன். பிடித்து இழுத்து வந்து கால்களில் சூடு வைத்தார்கள். தினமும் அடித்து உதைத்தார்கள். எனக்கு உதவ அந்த வீட்டில் மட்டுமல்ல, வெளியேயும் யாரும் இல்லை. என் வீட்டில் உள்ளவர்கள் வந்தார்கள். என்னை சித்ரவதை செய்வதை தெரிந்து சண்டை போட்டார்கள். ஆனாலும் எந்த பலனும் ஏற்படவில்லை. பன்னிரெண்டு வயதில் ஒரு குழந்தைக்கு தாயானேன். அதன் பிறகும் என்னை கொடுமைப்படுத்தினார்கள். அவர்கள் விருப்பத்திற்கெல்லாம் நான் உடன்படாததால், என் குழந்தையை என்னிடமிருந்து பிரித்துவிடுவதாக மிரட்டினார்கள். ஒருகட்டத்தில் குழந்தையை கொன்றுவிடப்போவதாகவும் சொன்னார்கள். என்னையும், குழந்தையையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது.

ஒருநாள் வீட்டிற்குள் பாலியல் தொழில் செய்துகொண்டிருந்த நான்கு பெண்களுக்கு விடுதலை கொடுத்து அவர்களை ரகசியமாக வெளியேற்றிவிட்டேன். அவர்கள் தப்பிச் செல்ல நான்தான் காரணம் என்று தெரிந்ததும் என்னை கடுமையாக தாக்கினார்கள். ஒவ்வொரு அடி விழும்போதும், எனக்குள் வைராக்கியம் உருவானது. எப்பாடுபட்டாவது அவர்களை அழிக்க வேண்டும் என்று மனதுக்குள் உறுதி எடுத்துக் கொண்டேன். பாலியல் பெண்களுக்கு விமோசனம் அளிக்கும் தொண்டு நிறுவனம் ஒன்றுடன் ரகசிய தொடர்பை ஏற்படுத்தினேன். அவர்கள் கொடுத்த ஆதரவு எனக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்தது” என்கிறார்.

இப்படி பாத்திமா கதூன், அந்த விபசார கும்பலுடன் போராடிக்கொண்டிருந்த நேரத்தில் புதிதாக ஒரு பெண்ணை பாலியல் தொழிலுக்காக விலைபேசி கொண்டு வந்து வீட்டில் சேர்த்திருக்கிறார்கள். அந்த பெண்ணுக்கு பாலியல் தொழிலில் விருப்பம் இல்லை. அதனால் அவள் மறுப்பு தெரிவித்திருக்கிறாள். அவளை பணிய வைப்பதற்காக, பாத்திமாவின் மாமியார் அந்த பெண்ணை கம்பால் கடுமையாக தாக்கியிருக்கிறார். அதை பார்த்த பாத்திமாவுக்கு பொறுமை போய்விட்டது. இனனொரு கம்பை எடுத்து வந்து மாமியாரை கண்மூடித்தனமாக அடித்து துவைத்திருக்கிறார்.

“மாமியாரை அடித்துப்போட்ட ஆவேசத்திலே, நீயெல்லாம் ஒரு பெண்ணா? இன்னொரு பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்த இப்படியா அடிப்பாய்? என்று கேட்டேன். உடனே என் மாமியார், அவள் குடும்பத்திற்கு மொத்தமாக பணம் கொடுத்து அவளை கொண்டு வந்திருக் கிறேன். பணத்தை கொடுத்துவிட்டு அவளை அழைத்துச்செல்லும்படி சொல் என்றார். நான், ‘நீங்கள் பணம் கொடுத்ததற்கு அவள் பொறுப்பில்லை. அவளை இப்போது விடுதலை செய்யாவிட்டால் உங்களை அடித்தே கொன்று விடுவேன்’ என்று கூறி அவளை விடுவித்தேன்.

பின்பு நானும் அந்த சாக்கடையில் இருந்து விடுதலை பெற்றேன். அன்றிலிருந்து இன்று வரை, விபசார கும்பலிடம் சிக்கியிருக்கும் எவ்வளவோ பெண்களை காப்பாற்றியுள்ளேன். அவர்கள் சமூகத்தோடு இணைந்து புது வாழ்க்கை தொடங்கவும் வழிகாட்டுகிறேன். ஆனால் சிவப்பு விளக்கு பகுதிகளில் எவ்வளவோ பெண்கள் காப்பாற்ற முடியாத அளவுக்கு சிக்கி கண்ணீர்விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும். இதில் பெரிய கொடுமை என்னவென்றால், விபசார கும்பலில் இருந்து மீட்கப்படும் பெண்களை அவர்கள் குடும்பம் மீண்டும் ஏற்றுக்கொள்வதில்லை” என்ற அதிர்ச்சி தகவலையும் பாத்திமா வெளிப் படுத்துகிறார்.

இவரது சேவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் இவருக்கு பாராட்டும் குவிந்துகொண்டிருக்கிறது. குரோர்பதி நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு 25 லட்சம் ரூபாய் வென்றிருக்கிறார். அமிதாப்பச்சன் இவரை பாராட்டி, சேவை தொடர ஊக்குவித்தார். நடிகை ராணிமுகர்ஜியும் பாத்திமாவின் தைரியத்தை புகழ்ந்துள்ளார். 

Next Story