பெரம்பலூரில் பாரம்பரிய விதைத்திருவிழா விவசாயிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்


பெரம்பலூரில் பாரம்பரிய விதைத்திருவிழா விவசாயிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்
x
தினத்தந்தி 8 July 2018 10:45 PM GMT (Updated: 8 July 2018 7:00 PM GMT)

பெரம்பலூரில் பாரம்பரிய விதைத்திருவிழா நடந்தது. விழாவில் வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய மரபு நெல் விதைகள், நாட்டு காய்கறிகளின் விதைகள் உள்ளிட்டவற்றை விவசாயிகள், பொதுமக்கள் பார்வையிட்டு, அதனை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

பெரம்பலூர்,

அடுத்த தலைமுறைக்கு நஞ்சில்லா உணவுகளை தர வேண்டும் என்பதற்காக பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் குழு சார்பில் 3-ம் ஆண்டு பாரம்பரிய விதைத்திருவிழா பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள பழைய எல்.ஐ.சி. வளாகத்தில் நேற்று காலை தொடங்கியது. விதைத்திருவிழாவில் விவசாயிகள், பொதுமக்களின் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் பாரம்பரிய ஆற்காடு கிச்சலி சம்பா, இலுப்பைப்பூ சம்பா, அறுபதாம் குறுவை, கருடன் சம்பா, பூங்கார், கள்ளி மடையான், மாப்பிள்ளை உள்ளிட்ட பல்வேறு மரபு நெல் விதைகளும், நாட்டு பருத்தி விதைகள், அகத்திக்கீரை, வெந்தய கீரை உள்ளிட்ட பல்வேறு வகைகளின் கீரைகளின் விதைகளும், பீர்க்கன், புடலை, பூசணி, கொடி அவரை உள்ளிட்ட கொடிவகை காய்கறிகளின் விதைகளும், கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை உள்ளிட்ட செடிவகை விதைகளான நாட்டு காய்கறிகளின் விதைகளும், கம்பு, கேழ்வரகு, சோளம், குதிரைவாலி, பனி வரகு, தினை, வரகு, சாமை, கருப்பு கொள்ளு, சிவப்பு கொள்ளு ஆகிய விதைகளும் வைக்கப்பட்டிருந்தன.

இதனை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும், வெளியூரை சேர்ந்தவர்களும் வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு தேவையான விதைகளை ஆர்வத்துடன் தேர்வு செய்து வாங்கி சென்றனர். மேலும் விதைத்திருவிழாவில் இயற்கை வேளாண்மைக்கான இடு பொருட்கள், இயற்கை உரங்களான மண்புழு உரம், இயற்கை முறையில் தயாரித்த கரும்பு நாட்டு சர்க்கரை மற்றும் சிறுதானிய பிஸ்கட்டுகள், லட்டுகள், வரகு முறுக்கு, கேழ்வரகு லட்டு, எள்ளு, கடலை உருண்டை, பாசிப்பயிறு, சுண்டல் போன்ற திண்பண்டங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

மூலிகை டீ, சூப் வகைகளும், மூலிகை தைலங்கள் ஆகியவையும் விதைத்திருவிழாவில் விற்கப்பட்டன. விதைத்திரு விழாவில் இயற்கை உணவுகள், உணவு பொருட்கள், மூலிகைகள் மற்றும் விவசாயம் சம்பந்தமான புத்தக கண்காட்சியும் நடைபெற்றது. இதனை விழாவிற்கு வந்திருந்தவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். காலையில் தொடங்கிய விதைத்திருவிழா மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது.

முன்னதாக விதைத்திருவிழா பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளின் சிலம்பாட்டம், கோலாட்டம், தப்பாட்டம் மற்றும் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. அப்போது அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த இயற்கை வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வாரின் திருவுருவ படத்திற்கு சிறப்பு விருந்தினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். விழாவில் பெரம்பலூர் மாவட்ட கள்ளிமடையான் நெல் ரகத்தை செல்வகுமார் வழங்க கலியபெருமாள் என்பவர் பெற்று கொண்டார். தொடர்ந்து நீர் மேலாண்மை, மரபு நெல் சேகரிப்பு, நாட்டு விதை, மரக்கன்று வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, கீரை வளர்ப்பு என்கிற பல்வேறு தலைப்புகளில் வேளாண்மை வல்லுனர்கள் கருத்துரையாற்றினர். விதைத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உப்போடை ஆறுமுகம் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். 

Next Story