மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் நகரில் குரங்குகள் தொல்லை பொதுமக்கள் அவதி + "||" + Monkeys in Perambalur Civilians are suffering

பெரம்பலூர் நகரில் குரங்குகள் தொல்லை பொதுமக்கள் அவதி

பெரம்பலூர் நகரில் குரங்குகள் தொல்லை பொதுமக்கள் அவதி
பெரம்பலூர் நகரில் சுற்றித்திரியும் குரங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
பெரம்பலூர்,

பெரம்பலூர் நகரில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாகவே குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. வனப்பகுதியில் குரங்குகளுக்கு போதுமான உணவு, தண்ணீர் கிடைக்காததால், அவற்றை தேடி பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு குரங்குகள் வந்த வண்ணம் உள்ளன. அவ்வாறு வனப்பகுதியில் இருந்து பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இடம்பெயரும் குரங்குகள் பசியால் தெருக்களில் உள்ள குப்பை தொட்டியில் கொட்டப்பட்டுள்ள கெட்டு போன உணவு பொருட்களை எடுத்து சாப்பிடும் பரிதாப நிலை ஏற்படுகிறது.


மேலும் வீடுகளின் மொட்டை மாடிகளில் காய போட்டிருக்கும் உணவு பொருட்களை குரங்குகள் எடுத்து சென்று சாப்பிடுகின்றன. மேலும் காய போட்டிருக்கும் துணிகளை கிழித்து எறிகின்றன. திறந்து கிடக்கும் வீடுகளின் உள்ளே குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து உணவு பொருட்கள், காய்கறிகளை எடுத்து செல்கின்றன. சிறுவர்கள் கையில் வைத்திருக்கும் உணவு பொருட்களை கூட விட்டு வைப்பதில்லை, அதனையும் குரங்குகள் பிடுங்கி செல்கின்றன.

இவ்வாறு அட்டகாசம் செய்யும் குரங்குகளை பொதுமக்கள் விரட்டினால், அவை கடிக்க பாய்கிறது. தெருக்களிலும் குரங்குகள் அமர்ந்து கொண்டு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சத்தமிடுகின்றன. அதனால் குழந்தைகளுடன் செல்லும் பெற்றோர் அச்சத்துடன் வெளியே சென்று வருகின்றன. கடந்த சில நாட்களாகவே குரங்குகளின் தொல்லையால் பெரம்பலூர் நகர் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் குரங்குகள் சாலையில் சுற்றித்திரிவதால் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் பெரம்பலூர் நகர் பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டு விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.