பாகனேரி ஊராட்சியில் மோட்டார் வைத்து குடிநீர் திருட்டு


பாகனேரி ஊராட்சியில் மோட்டார் வைத்து குடிநீர் திருட்டு
x
தினத்தந்தி 8 July 2018 10:15 PM GMT (Updated: 8 July 2018 7:17 PM GMT)

மதகுபட்டியை அடுத்த பாகனேரி ஊராட்சியில் மின் மோட்டார் மூலம் குடிநீர் திருடப்படுவதால் பலர் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர்.


மதகுபட்டி,


மதகுபட்டியை அடுத்துள்ளது பாகனேரி ஊராட்சி. இந்த ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இங்கு 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் இணைப்புகளில் சமீப காலமாக மோட்டார் வைத்து குடிநீர் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவ்வாறு குடிநீர் திருடப்படுவதால் மற்ற குடிநீர் இணைப்புகளுக்கும், பொது இணைப்புகளிலும் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். பாகனேரி ஊராட்சியில் பெரும்பாலான வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இணைப்புகளில் குடிநீர் சரிவர கிடைப்பதில்லை என்று கடந்த சில மாதங்களாகவே புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

குடிநீர் குழாய்கள் உடைப்பு காரணமாக ஒருபுறம் குடிநீர் வீணாகி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது குடிநீர் திருட்டு காரணமாக மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் தவிப்பிற்குள்ளாகி உள்ளனர்.


இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குடிநீர் திருட்டு காரணமாக சில இடங்களில் தண்ணீர் குறைவாகவும், சில இடங்களில் அதிகமாகவும் வருகிறது. ஊராட்சியில் பெரும்பாலான இடங்களில் மோட்டாரை பொருத்தி நேரடியாக குடிநீர் திருடப்படுவதால் ஒருபகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் திருடும் மோட்டாரை பறிமுதல் செய்து, அந்த வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும் இதற்கு மாற்றாக மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சினால் தானாக மூடிக்கொள்ளும் வால்வை அனைத்து இணைப்புகளிலும் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.



Next Story