வேலை வாங்கித்தருவதாக என்ஜினீயரிடம் ரூ.3½ லட்சம் மோசடி
சிதம்பரம் அருகே வேலை வாங்கித்தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே ஒடக்கநல்லூர் வடப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவருடைய மகன் மணிவண்ணன்(வயது 24). என்ஜினீயரான இவர், வேலை கேட்டு பல நிறுவனங்களில் விண்ணப்பித்திருந்தார். அந்த சமயங்களில் மணலூர் லால்புரத்தை சேர்ந்த ஆனந்தன்(48), இவருடைய மகன் அர்ஜூன், அரக்கோணத்தை சேர்ந்த சுமன் ஆகியோருடன் மணிவண்ணனுக்கு அறிமுகம் கிடைத்தது.
அப்போது ஆனந்தன் உள்பட 3 பேரும், தங்களுக்கு ஏராளமான தனியார் நிறுவனங்கள் தெரியும் என்றும், அதில் எதாவது ஒரு நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாகவும் மணிவண்ணனிடம் ஆசைவார்த்தை கூறி உள்ளனர். இதையடுத்து மணிவண்ணனும், தனக்கு வேலை வாங்கித்தருமாறு கூறி உள்ளார். அதற்கு 3 பேரும், பணம் கொடுத்தால் உடனடியாக வேலை வாங்கித்தருவதாக கூறினர்.
இதை உண்மை என்று நம்பிய மணிவண்ணன், ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட 3 பேரும், மணிவண்ணனுக்கு வேலை வாங்கிக்கொடுக்கவில்லை. அதன்பிறகுதான், அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மணிவண்ணன், ஆனந்தனிடம் சென்று, தான் கொடுத்த பணத்தை திருப்பித்தருமாறு கேட்டார். அதற்கு ஆனந்தன் உள்பட 3 பேரும் சேர்ந்து அவரை தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்தார். மேலும் அர்ஜூன், சுமன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story