மாவட்ட செய்திகள்

நீட் தேர்வை தமிழக அரசு ஏற்கவில்லை அமைச்சர் காமராஜ் பேட்டி + "||" + Minister Kamaraj interviewed not the Tamil Nadu government

நீட் தேர்வை தமிழக அரசு ஏற்கவில்லை அமைச்சர் காமராஜ் பேட்டி

நீட் தேர்வை தமிழக அரசு ஏற்கவில்லை அமைச்சர் காமராஜ் பேட்டி
நீட்தேர்வை தமிழக அரசு ஏற்கவில்லை என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
திருவாரூர்,

திருவாரூர் பஸ் நிலையத்தில் மன்னார்குடியில் இருந்து திருப்பூருக்கு புதிய பஸ் சேவை தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். கோபால் எம்.பி. முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு ரூ.25 லட்சம் மதிப்பிலான புதிய பஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-


முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கிராம, நகர்புறங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய பஸ் இயக்கம் மற்றும் புதிய வழித்தடங்கள் போன்றவற்றை தொடங்கி வைத்தார். அவருடைய வழியில் செயல்படும் தமிழக அரசு நாகப்பட்டினம் மண்டலத்திற்கு 60 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்தது.

இதில் ரூ.25 லட்சம் மதிப்பிலான மன்னார்குடியில் இருந்து திருப்பூருக்கு புதிய பஸ் சேவையை தொடங்கி வைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் அனைத்து பஸ்கள் புதிய பஸ்களாக மாற்றப்பட்டு வருகிறது. தமிழக அரசை பொறுத்தவரை தமிழக மக்கள் தேவைகளை அறிந்து, அவர்கள் நலன் காக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, உதவி கலெக்டர் முருகதாஸ், அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர் (வணிகம்) ராஜா, துணை மேலாளர் (தொழில் நுட்பம்) சிதம்பரகுமார், கிளை மேலாளர் திருமலைநாதன், கூட்டுறவு சங்க தலைவர்கள் மூர்த்தி, கலியபெருமாள், முன்னாள் தலைவர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வாக இருந்தாலும், தமிழக மக்களின் தேவைகள் எதுவாக இருந்தாலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தான் தமிழக அரசு முடிவு எடுத்து வருகிறது. நீட் தேர்வை பொறுத்தவரை தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி நீட் தேர்வை எழுத வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்.

தமிழக அரசை பொறுத்தவரை நீட் தேர்வு வேண்டாம் என்ற நிலையில் இருந்து மாறவில்லை. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினாலும், மற்ற மாநிலங்களில் நீட் தேர்வு கடைப்பிடித்து வருவதால் நமது மாணவர்களை தேர்விற்கு தயார் செய்ய வேண்டிய நிலையில் அரசு இருந்து வருகிறது. மாணவர்கள் நலன், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தமிழக அரசு செயல்படும்.

காவிரி நீர் வழங்க முடியாது என கர்நாடக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டு விட்டது. தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்கும். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த எங்களுக்கு விருப்பமில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.