படப்பை அருகே அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


படப்பை அருகே அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 July 2018 3:45 AM IST (Updated: 9 July 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே அரசு ஆதி திராவிட நல ஆரம்ப பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த வைப்பூர் அருகே பேரீஞ்சம்பாக்கம் ஊராட்சியில் அரசு ஆதி திராவிட நல ஆரம்ப பள்ளி உள்ளது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளிக்கூடத்தில் 25-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சில ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் விளையாடி கொண்டிருக்கும் போது ஆடு, மாடுகள் மற்றும் விஷ பூச்சிகள் பள்ளியின் உள்ளே அடிக்கடி வந்து செல்கிறது. இதனால் மாணவ -மாணவிகள் ஒரு வித அச்சத்துடன் உள்ளனர்.


பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் ஒரு சில நேரங்களில் மாணவ-மாணவிகள் சாலையில் வந்து நிற்கின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலையில் அதிவேகமாக வாகனங்கள் சென்று வருவதால் மாணவ-மாணவிகளுக்கு விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

மேலும் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு போதிய கழிவறை வசதிகள் இல்லாமலும் குடிநீர் தொட்டி அமைக்கப்படாமலும், உள்ளது. பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்த நிலையில் உள்ளது.


எனவே மாணவ-மாணவிகளின் எதிர்கால நலன் கருதி பள்ளியின் சுற்றுச்சுவர்களை உடனடியாக அமைக்க வேண்டும். கழிவறை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

குடிநீர் வசதிகள் ஏற்படுத்தவும், கட்டிடத்தின் மேற் கூரையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story