மாவட்ட செய்திகள்

மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிக்க முயற்சி + "||" + Try to snatch the knife with a knife to the ancestor

மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிக்க முயற்சி

மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிக்க முயற்சி
வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டு இருந்த மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிக்க முயன்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை, 

கோவை மசக்காளிபாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். அவருடைய மனைவி சாரதாமணி (வயது 64). வெங்கடேஷ் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். சாரதாமணிக்கு ஹேமலதா (38) என்ற மகள் உள்ளார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தந்தை இறந்ததில் இருந்து ஹேமலதா தனது தாயார் சாரதாமணி வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 5.45 மணியளவில் சாரதாமணி தனது வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம ஆசாமி திடீரென சாரதாமணியிடம் கத்தியை காட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை கேட்டு மிரட்டி உள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த சாரதாமணி திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டார்.

சத்தம்கேட்டு வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்த ஹேமலதா மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனை தொடர்ந்து அந்த மர்ம ஆசாமி தப்பி ஓடிவிட்டார். இதில் அந்த ஆசாமி வைத்திருந்த கத்தி சாரதாமணியின் கன்னத்தில் பட்டதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டு இருந்த மூதாட்டியிடம் மர்ம ஆசாமி ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி நகையை பறிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.எனவே போலீசார் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இந்த பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.