ஓட்டேரியில் மின்வாரிய அலுவலகங்கள் அருகே ஆபத்தான நிலையில் மின்சார பெட்டிகள் மழைக்கால உயிர்ப்பலியை தடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்


ஓட்டேரியில் மின்வாரிய அலுவலகங்கள் அருகே ஆபத்தான நிலையில் மின்சார பெட்டிகள் மழைக்கால உயிர்ப்பலியை தடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 July 2018 2:39 AM IST (Updated: 9 July 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டேரியில் மின்வாரிய அலுவலகங்கள் அருகே ஆபத்தான நிலையில் மின்சாரபெட்டிகள் இருக்கின்றன. மழைக்கால உயிர் பலியை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொது மக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

திரு.வி.க நகர்,

சென்னை கொடுங்கையூரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மழையின்போது தரைமட்டத்தில் இருந்த மின்சாரபெட்டியில் இருந்து வெளியேறிய மின்சாரம் தாக்கியதில் யுவஸ்ரீ (வயது 9) மற்றும் பாவனா (7) என்ற 2 சிறுமிகள் பலியானார்கள்.

அனைவரையும் கண்கலங்க வைத்த இந்த சிறுமிகளின் மரணம் எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என்பதற்காக சென்னை நகரில் தரைமட்டத்தில் உள்ள அனைத்து மின்சார பெட்டிகளும் தரைமட்டத்தில் இருந்து 3 அடி உயரத்துக்கு கான்கிரீட் தூண் எழுப்பி மாற்றி அமைக்கப்படும் என அரசு அறிவித்தது.

ஆனால் ஓட்டேரியில் மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் பல இடங்களில் தரைமட்டத்திலான மின்சாரபெட்டிகள் இப்போதும் இருப்பது இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டு இருப்பதை உணரமுடிகிறது.


சென்னை ஓட்டேரி குக்ஸ் சாலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உள்ளது. உதவி பொறியாளர் தலைமையில் உள்ள இந்த அலுவலகமானது மின்சாரம் இயக்குதல் மற்றும் பராமரித்தல் என்ற பெயரில் இயங்கி வருகிறது. மேலும் அதே சாலையின் மறுபுறம் தமிழ்நாடு மின்சார துணை மின் நிலையம் உள்ளது. இங்கு செயற்பொறியாளர் தலைமை அலுவலகமும், ஓட்டேரி உதவி பொறியாளர் அலுவலகமும் உள்ளன.

மின்வாரிய அலுவலகத்தின் அருகிலேயே சுமார் 15-க்கும் மேற்பட்ட மின்சார பெட்டிகள் பழுதடைந்த நிலையில் அபாயகரமான நிலையில் உள்ளன. அபாயகரமான நிலையில் உள்ள மின்சார பெட்டியால் எப்போது விபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.


பழுதடைந்த நிலையில் உள்ள இதுபோன்ற மின்பெட்டிகள் சாய்ந்து விழும் நிலையில் திறந்தபடி உள்ளது. இந்த மின்சார பெட்டிகளில் இருந்து அவரவர் விருப்பத்திற்கேற்ப மின்சாரத்தை தங்களது நிறுவனத்திற்கும் வீடுகளுக்கும் திருட்டு தனமாக எடுத்து உபயோகித்து வருவதாகவும் இதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளதாகவும் பொது மக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

மின்சார பெட்டிகள் மீது வாகனங்கள் சாய்ந்தும், மண் நிரம்பியும் இருப்பதால் மின்கசிவு ஏற்பட்டு பெரும் விபத்து ஏற்படும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


இதுகுறித்து அருகில் உள்ள செயற்பொறியாளர் முதல் உதவி பொறியாளர் வரை புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும், ஊழியர்கள் பற்றாக்குறையால் வேலை செய்ய தாமதம் ஏற்படுவதாகவும் அவர்கள் அலட்சியமாக பதில் கூறுவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ள ஓட்டேரியில் பெரும்பாலான மின்பெட்டிகள் இதே அவலத்தில் உள்ளதால், பெரும் விபத்து ஏற்பட்டு அதற்கு நஷ்டஈடு கொடுப்பதற்கு பதில் மின்பெட்டிகளை சீரமைத்து கொடுத்தால் எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரில் மின்கசிவு ஏற்பட்டு 2 சிறுமிகள் பலியானார்கள். மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்ககூடாது என்று அரசு அறிவுறுத்தியதன்பேரில் அனைத்து மின்பெட்டிகளும் 3 அடி உயரத்திற்கு தூண்கள் எழுப்பி சீரமைக்கும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டனர்.

ஆனால் இந்த பணியில் தொய்வு ஏற்பட்டு தற்போது பெரும்பாலான மின்பெட்டிகள் அபாயகரமான நிலையில் கதவு திறந்தபடி உள்ளன.

மழை காலம் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் மின்கசிவு ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மின்வாரிய அதிகாரிகள் ஒருமுறை அனைத்து மின்பெட்டிகளின் தரம் அறிந்து அவற்றை சரிசெய்யவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story