பொதுமக்கள் தூர்வாரியும் பயன் இல்லை: ஏரியில் குவித்து வைக்கப்பட்டுள்ள மண்ணை அகற்ற அதிகாரிகள் தயக்கம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


பொதுமக்கள் தூர்வாரியும் பயன் இல்லை: ஏரியில் குவித்து வைக்கப்பட்டுள்ள மண்ணை அகற்ற அதிகாரிகள் தயக்கம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 8 July 2018 10:30 PM GMT (Updated: 8 July 2018 9:16 PM GMT)

பொதுமக்கள் தூர்வாரிய குரோம்பேட்டை நெமிலிச்சேரி ஏரியில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகள் கலந்த மண்ணை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை அருகே நெமிலிச்சேரியில் 50 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் இருந்த நெமிலிச்சேரி ஏரி ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி தற்போது சுமார் 14 ஏக்கர் அளவு மட்டுமே உள்ளது. குரோம்பேட்டை பகுதியில் நிலத்தடி நீருக்கு முக்கிய காரணியாக இருந்த இந்த ஏரியில், கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் கலந்ததால் மழை காலங்களில் மழைநீரை கூட தேக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த ஏரியை தூர்வார வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களே பொது நல குடியிருப்பு சங்கங்களுடன் இணைந்து ஏரியை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தூர்வாரும் பணிக்கு ஏராளமான பொதுமக்கள் நன்கொடைகள் வழங்கி உள்ளனர்.


ஏரியை தூர்வாரும்போது மண்ணுடன் பிளாஸ்டிக் குப்பைகளும் கலந்து இருந்தது. இதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் குப்பைகள் கலந்த மண் ஏரியில் குவித்து வைக்கபட்டுள்ளது. இந்த குப்பைகள் கலந்த மண்ணையாவது அகற்ற வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர், ஏரியில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகள் கலந்த மண்ணை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள் கலந்து பேசி அகற்ற உத்தரவிட்டார்.


இருப்பினும், பொதுப் பணித்துறை அதிகாரிகள் குப்பைகள் கலந்த மண்ணை அகற்ற தயக்கம் காட்டி வருகின்றனர். குப்பைகள் கலந்த மண்ணை அகற்றாவிட்டால் மழை வரும் போது மீண்டும் அவை ஏரியில் கலந்துவிடும். இதனால், பொதுமக்கள் தூர்வாரியதற்கு எந்த பயனும் இல்லாமல் போய் விடும் நிலை உள்ளது.

எனவே இதில் தமிழக அரசு தலையிட்டு உடனடியாக குப்பைகள் கலந்த மண்ணை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story