மாணவ-மாணவிகளுக்கு அடிப்படை சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்


மாணவ-மாணவிகளுக்கு அடிப்படை சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 8 July 2018 10:45 PM GMT (Updated: 8 July 2018 9:41 PM GMT)

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு அடிப்படை சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹலுவாடி ஜி.ரமேஷ் கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராக்கிங் தடுப்பு சிறப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் காங்கேயம் ரோட்டில் உள்ள புனித ஜோசப் பெண்கள் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. கருத்தரங்கிற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹலுவாடி ஜி.ரமேஷ் தலைமை தாங்கினார்.

மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி வரவேற்று பேசினார். மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, துணை கமிஷனர் உமா, வக்கீல்கள் சத்தியநாராயணன், லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஹலுவாடி ஜி.ரமேஷ் பேசியதாவது:-

பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பற்றியும், அதில் உள்ள அடிப்படை உரிமைகள் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது நாளைய சமூகத்துக்கான விழிப்புணர்வாக இருக்கும். மாணவர்களுக்கு இடையே நடை பெறும் ராக்கிங் சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு நீதிமன்றம் மூலம் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரவும் வாய்ப்பு உள்ளது.

கிண்டல், கேலி என்பது ஒரு புறம் இருந்தாலும், ஒரு மனிதனை தொட்டு அவனை துன்புறுத்துதலுக்கு சட்டத்தில் அதிக தண்டனை உண்டு. மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் ஒரு மனிதருக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அதாவது சுத்தமான குடிநீர், தரமான சாலை வசதிகளை செய்து தரவேண்டியது அரசின் கடமை. அதனை செய்ய தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தின் மூலம் அரசாங்கத்தின் மீது சட்ட நடவடிக்கைகள் கூட எடுக்க முடியும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் அடிப்படை சட்டங்கள் குறித்து இது போன்ற விழிப்புணர்வு முகாம்களை ஏற்படுத்தும் போது மக்கள் அரசிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிய முடியும். குறைந்த பட்சம் அடிப்படை உரிமைகளை பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் தெரிந்து கொள்வது அந்த சமூகத்துக்கான ஆரோக்கியமான அம்சமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் சார்பு நீதிபதி அழகேசன் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதிலும் உள்ள நீதிபதிகள், மூத்த வக்கீல்கள், வக்கீல் சங்கத்தினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story