பசுமைசாலைக்கு எதிராக போராட்டத்தில் கைதான 63 பேர் ஜெயிலிருந்து நிபந்தனை ஜாமீன்


பசுமைசாலைக்கு எதிராக போராட்டத்தில் கைதான 63 பேர் ஜெயிலிருந்து நிபந்தனை ஜாமீன்
x
தினத்தந்தி 8 July 2018 10:32 PM GMT (Updated: 8 July 2018 10:32 PM GMT)

8 வழி பசுமைச்சாலைக்கு எதிராக போராடி கைது செய்யப்பட்ட 63 பேர் வேலூர் ஜெயிலில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். அவர்கள் 10 நாட்கள் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர், ஜூலை.9-

சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணி திருவண்ணாமலை, சேலம், காஞ்சீபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பலர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 6-ந் தேதி திருவண்ணாமலையில் 8 வழி பசுமைச்சாலை திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பை சேர்ந்தவர்களும், விவசாயிகளும் பசுமைச்சாலை திட்ட அரசாணை நகல் எரிக்கும் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 91 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களில் 63 பேர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சதித்திட்டம் தீட்டுதல், அரசாணை நகல் எரித்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அவர்கள் ஜாமீன் கேட்டு திருவண்ணாமலை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து அவர்களுக்கு 10 நாட்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட்டு விக்னேஷ்பிரபு உத்தரவிட்டார்.

63 பேரும் தினமும் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் 63 பேரும் வேலூர் ஆண்கள் ஜெயிலில் இருந்து நேற்று காலை வெளியே வந்தனர். அவர்களை பசுமைச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் வரவேற்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத்தலைவர் ரவீந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் மீதான வழக்கு நடவடிக்கையை கைவிட வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை கைவிட வேண்டும். கைவிடும் வரை எங்களின் போராட்டம் தொடரும். நகல் எரிப்பு போராட்டம் என்பது அனுமதிக்கப்பட்ட போராட்ட வடிவம். இதில் ஈடுபட்ட எங்களை கைது செய்து வெளியே வர முடியாத அளவுக்கு வழக்குப்பதிவு செய்தது சட்டவிரோதமானது. மாநில அரசு எங்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்து, வழக்கை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து திருவண்ணாமலைக்கு சென்ற அவர்களை அங்கிருந்த 8 வழி பசுமைச்சாலை கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் வரவேற்றனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story