நாட்டு துப்பாக்கி வெடித்து ஆயுதப்படை போலீஸ்காரர் படுகாயம்


நாட்டு துப்பாக்கி வெடித்து ஆயுதப்படை போலீஸ்காரர் படுகாயம்
x
தினத்தந்தி 8 July 2018 10:52 PM GMT (Updated: 8 July 2018 10:52 PM GMT)

சாராய விற்பனையை தடுக்க சென்றபோது நாட்டு துப்பாக்கி வெடித்து ஆயுதப்படை போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.

வாணாபுரம், 

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய விற்பனையை தடுக்க மதுவிலக்கு அமலாக்க போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, திருவண்ணாமலையை அடுத்த தண்டராம்பட்டு அருகே உள்ள மலைக் கிராமப்பகுதிகளில் போலீசார் நேற்று முன்தினம் வழக்கம் போல் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நாட்டு துப்பாக்கி ஒன்று கிடந்தது. அதனை போலீசார் எடுத்து கொண்டு மலையில் இருந்து கீழே இறங்கினர்.

இதையடுத்து ஆயுதப்படை போலீஸ்காரர் அசோக்குமார் அந்த துப்பாக்கியை இயக்கி பார்த்து உள்ளார். அப்போது துப்பாக்கி இயங்கவில்லை.

வாணாபுரம் அருகே குங்கிலியநத்தம் ஏரிக்கரை அருகில் வரும்போது நாட்டு துப்பாக்கி அசோக்குமார் கையில் இருந்து தவறி விழுந்து வெடித்தது. அதில் இருந்து வெளியே வந்த குண்டு அசோக்குமாரின் காலில் பாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அசோக்குமார் வலியால் அலறித் துடித்தார். படுகாயம் அடைந்த அசோக்குமாரை மீட்ட சக போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story