பாளையங்கோட்டையில் ஜான் பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு


பாளையங்கோட்டையில் ஜான் பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 9 July 2018 4:56 AM IST (Updated: 9 July 2018 4:56 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் ஜான் பாண்டியன் வீட்டில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை, 

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளைநகரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியனுக்கு சொந்தமான வீடு உள்ளது. அப்பகுதியில் நேற்று இரவு 7 மணி அளவில் மர்மநபர்கள் 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் திடீரென தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை ஜான் பாண்டியன் வீடு நோக்கி வீசினர்.

ஒரு குண்டு, வீட்டின் முன்பு உள்ள மரத்தில் பட்டு தீப்பற்றி எரிந்தது. பின்னர் சிறிது நேரத்தில் தீ அணைந்து புகை மட்டும் வந்தது. மற்றொரு பெட்ரோல் குண்டை, ரோட்டில் வீசினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உஷார் அடைந்து, மர்மநபர்களை பிடிக்க வேகமாக ஓடி வந்தனர். அதற்குள் அவர்கள் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில், நேற்று காலை தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் ஒரு பிரமுகரின் திருமண விழாவில் ஜான்பாண்டியன் தரப்பினருக்கும், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் இளைஞர் அணியை சேர்ந்த கண்ணபிரான் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மோதலும் உருவானது.

பின்னர் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதில் இருதரப்பையும் சேர்ந்தவர்களின் கார் கண்ணாடி உடைந்தது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கண்ணபிரானின் ஆதரவாளர்கள், பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

மேலும் ஜான் பாண்டியன் வீட்டின் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற நபர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story