மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு திட்ட இயக்குனர் சிறப்பு பேட்டி


மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு திட்ட இயக்குனர் சிறப்பு பேட்டி
x
தினத்தந்தி 8 July 2018 11:33 PM GMT (Updated: 8 July 2018 11:33 PM GMT)

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய குழந்தை தொழிலாளர்கள் திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் என்னென்ன என்பது குறித்து திட்ட இயக்குனர் எஸ்.விஜயகுமாரி ‘தினத்தந்தி’ நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.


சேலம்

 அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- சேலம் மாவட்டத்தில் எங்கெங்கு குழந்தை தொழிலாளர்கள் அதிகளவு உள்ளனர்?

பதில்:- 9 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் உருவாக முக்கிய காரணம் வறுமை. மேலும் குடும்பத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சினை காரணமாகவும் சிலர் குழந்தை தொழிலாளர்களாக மாறுகின்றனர். மாவட்டத்தை பொறுத்தவரை தலைவாசல், ஆத்தூர், சிவதாபுரம், வேடுகாத்தாம்பட்டி, சேலத்தாம்பட்டி, பனங்காடு, செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு குழந்தை தொழிலாளர்கள் இருந்தனர். தற்போது இந்த பகுதிகளில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

கேள்வி:- மாவட்டத்தில் இதுவரை எத்தனை குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்?

பதில்:- சேலம் மாவட்டத்தில் 1995-ம் ஆண்டு முதல் இதுவரை 11 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10,200 பேர் தேசிய குழந்தை தொழிலாளர்கள் மூலம் செயல்படுத்தப்படும் பள்ளியில் படித்து முடித்துள்ளனர். இதில் 350 பேர் அரசு கலைக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்துள்ளனர். உயர்க்கல்வி படிப்பவர்களுக்கு அரசு மூலம் கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இதுவரை 140 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.


கேள்வி:- நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுகளில் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களின் தேர்ச்சி பற்றி?

பதில்:- எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 41 பேர் எழுதினார்கள். இதில் 36 பேர் தேர்ச்சி அடைந்தனர். இதேபோல் பிளஸ்-2 தேர்வு எழுதியவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் தேசிய குழந்தை தொழிலாளர்கள் திட்டம் 15 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்துடன் ஒப்பிடுகையில் நமது மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் 3 இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.


கேள்வி:- குழந்தை தொழிலாளர்களே இல்லாமல் ஆக்க என்னென்ன பணிகள் மேற்கொண்டு வருகிறீர்கள்?

பதில்:- சேலம் மாவட்டத்தை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கான பணிகளில் கலெக்டரின் மேற்பார்வையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். நமது மாவட்டத்தை பொறுத்தவரை குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. ஆரம்பத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் மூலம் 41 பள்ளிகள் இருந்தன. தற்போது 14 பள்ளிகளே செயல்பட்டு வருகிறது.

குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் அடிக்கடி நடத்தி வருகிறோம். மேலும் குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாமும் நடத்தி வருகிறோம்.


கேள்வி:- குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் தண்டனை என்ன?

பதில்:- பெரும்பாலும் குழந்தை தொழிலாளர்கள் பீடி சுற்றுதல், செங்கல் சூளை பணியில் ஈடுபடுதல், வெள்ளிப்பட்டறையில் பணியாற்றுதல் மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது பார்த்தல் உள்ளிட்ட தொழில்களில் அதிகளவு ஈடுபடுத்தப்படுகின்றனர். வெள்ளி, கொலுசு தயாரிக்கும் சங்க நிர்வாகிகளை அழைத்து குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என்று தெரிவித்தோம். அப்போது அவர்கள் குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த மாட்டோம் என்று எங்களிடம் உறுதியளித்துள்ளார்கள்.

குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் குழந்தை தொழிலாளர்(தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்), இளம் பருவத்தினர் திருத்த சட்டம் 2016-ம் படி ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story