திம்பம் மலைப்பாதை சாலையில் பயணிகள் வீசும் உணவுக்காக காத்திருக்கும் அனுமன் வகை குரங்குகள்
திம்பம் மலைப்பாதை சாலையில் பயணிகள் வீசும் உணவுக்காக அனுமன் வகை குரங்குகள் காத்திருக்கின்றன.
பவானிசாகர்,
சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்த மலைப்பாதை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழிப்பாதையாக உள்ளது. இதனால் தினமும் பஸ், லாரி, கார் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. திம்பம் மலைப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, மான், கரடி, குரங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
இதில் 10-வது கொண்டை ஊசி வளைவு முதல் 22-வது கொண்டை ஊசி வளைவு வரை அனுமன் வகை குரங்குகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இந்த குரங்குகளுக்கு வாகனங்களில் செல்பவர்கள் தாங்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை வீசிச்செல்கிறார்கள். இதனால் அனுமன் வகை குரங்குகள் தற்போது திம்பம் மலைப்பாதை சாலையில் உணவுக்காக காத்திருக்கிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘திம்பம் மலைப்பாதையில் தற்போது அனுமன் வகை குரங்குகள் அதிகமாக காணப்படுகிறது. இந்த குரங்குகளுக்கு மலைப்பாதை சாலை வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பிஸ்கட், வடை உள்ளிட்ட உணவுப்பொருட்களை கொடுத்துச்செல்கிறார்கள், சிலர் சாலையோரம் வீசியும் சென்று விடுகிறார்கள். இதனை தின்றுவிட்டு, வனப்பகுதியில் காணப்படும் பழங்களை அனுமன் வகை குரங்குகள் உண்பதில்லை. மேலும் வாகன ஓட்டிகள் தரும் உணவுக்காக அனுமன் வகை குரங்குகள் காத்திருக்கிறது. இதனால் அனுமன் வகை குரங்குகள் தற்போது உணவுக்காக ரோட்டின் நடுவில் நிற்கிறது. அதனால் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே வாகனங்களில் செல்பவர்கள் அனுமன் வகை குரங்குகளுக்கு உணவுகளை கொடுக்காமல் இருக்க வேண்டும். மேலும் வனத்துறையினர் திம்பம் மலைப்பாதை சாலையில் திரியும் அனுமன் வகை குரங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story